Published : 17 Mar 2020 06:32 PM
Last Updated : 17 Mar 2020 06:32 PM

திடீர் விடுமுறையால் தேங்கிய சத்துணவு முட்டைகள்; மாணவர்களுக்கு வழங்காமல் வெளி மார்க்கெட்டில் விற்றால் நடவடிக்கை: சமூக நல ஆணையர் எச்சரிக்கை

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் திடீர் விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய 1.30 கோடி முட்டைகளை மாணவர்களிடம் அளிக்க வேண்டும். வெளிமார்க்கெட்டில் விற்றால் நடவடிக்கை என சமூக நல ஆணையர் எச்சரித்துள்ளார்

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரமாக சில உத்தரவுகளை அனைத்து மாநிலங்களுக்கும் செயல்படுத்த உதரவிட்டுள்ளது.

அதைப் பின்பற்றி தமிழகமும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 12-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழக்கம்போல் தேர்வு நடைபெறும்.

அங்கன்வாடிகளில் பயிலும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு உண்டான சத்துணவுப் பொருட்களை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்து கையொப்பம் பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 45 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த மாணவர்களுக்கு தினமும் சத்துணவுடன் ஒரு முட்டை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்குவதற்கான முட்டை, பள்ளிகளுக்கு இரு தினங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்படும். பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, 18-ம் தேதி வரை வழங்குவதற்கான முட்டை ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டது.

இந்நிலையில் இன்று முதல் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையை வீணாக்காமல் அவர்களுக்கு வழங்குவதற்கு சமூக நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு முட்டைகளை பயனாளிகளிடம் வழங்கி அவர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமோ கையொப்பம் வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முட்டைகள் லட்சக்கணக்கில் இருப்பதால் வெளிமார்க்கெட்டில் விற்கப்பட வாய்ப்புள்ளது. சத்துணவு முட்டைகளை வெளி மார்க்கெட்டில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சமூக நல ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்:

''தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு வழங்குவதற்காக 1.30 கோடி முட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த முட்டைகளை பயனாளிகளான தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களை வரவழைத்து மொத்தமாக மாணவர்கள் அல்லது அவரது பெற்றோர்களிடம் வழங்கி கையொப்பம் பெற வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் சத்துணவு திட்ட முத்திரையிடப்பட்ட முட்டைகள் சந்தைக்கு விற்பனைக்கு வரக்கூடாது. ஏதேனும் சந்தையில் விற்பது கண்டறியப்பட்டால் அதுகுறித்து விசாரணை நடத்தி சமபந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று பள்ளிகள் திறக்கப்படும் நாட்களுக்கு ஒரு நாள் முன்பாக சத்துணவுக்கான முட்டைகள் அனுப்பப்படும்''.

இவ்வாறு சமூக நல ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x