

தமிழக அரசு மேற்கொள்ளக்கூடிய சுகாதார நடவடிக்கைகள், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விடுமுறை அறிவிப்பு உள்ளிட்ட முதல்வரின் அறிவிப்புகள் அரசாணையாக மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு, கரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு, எடுத்துள்ள பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். தற்போது முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அரசாணையாக மாற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையாக வெளியிடப்பட்ட முதல்வர் பிறப்பித்த உத்தரவுகளில் குறிப்பிடத்தக்கவை வருமாறு:
'' * ரயில்களின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நம் மாநிலத்திற்கும், நம் மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிப்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் நிலையங்களிலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும், ரயில் பெட்டிகளையும் தொடர்ந்து கிருமி நாசினி மூலம் தினந்தோறும் சுத்தம் செய்யுமாறு தென்னக ரயில்வேயின் பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
* ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி ((Centralised Air Conditioning) உள்ள இடங்களில் அவற்றை (Vent, Duct) வாரம் ஒருமுறையாவது கிருமி நாசினி கொண்டு முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
* மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
* அரசுத் தேர்வுகள் (10 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரித் தேர்வுகள் – செய்முறைத் தேர்வுகள் (Practical) உட்பட) மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்.
* மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்.
* அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும். இம்மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை ((Dry Ration) அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்.
*மாநிலத்தில் செயல்படும் அனைத்துத் திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் (Malls), கேளிக்கை அரங்கங்கள் (Amusement Parks), நீச்சல் குளங்கள் (Swimming Pools), உடற்பயிற்சி மையங்கள் (Gymnasiums), உயிரியல் பூங்காக்கள் (Zoos) மற்றும் அருங்காட்சியகங்கள் (Museums) மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும்.
* ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது. அவ்வாறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கூட குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும். ஏற்கெனவே திட்டமிடப்பட்டது போக, புதிய நிகழ்ச்சிகள் எதுவும் மார்ச் 31 வரை நடைபெறுவதை திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.
* திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உட்பட அனைத்து சமூக நிகழ்வுகளிலும், குறைந்த அளவில் மக்கள் கூடினால், கரோனா வைரஸ் பரவுவது பெரிய அளவில் தடுக்கப்படும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அதனைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* அதிகமாகக் கூட்டம் கூடும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கோடைகாலப் பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளை நடத்த மார்ச் 31-ம் தேதி வரை அனுமதி வழங்கக் கூடாது.
அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள் (டாஸ்மாக் பார்கள் உட்பட) கேளிக்கை விடுதிகள் (clubs) போன்றவை மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும்”.
இவ்வாறு தலைமைச் செயலர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.