

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கரோனா குறித்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு காவல்துறை, சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சி சார்பில் பரிசோதனை செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு அதிகரிப்பை அடுத்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், காவல்துறையினர் , மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை இணைந்து பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தீவிர காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடல் வெப்பநிலையைக் கண்டறியும் கருவி மூலம் கட்டாயச் சோதனை செய்யப்படுகிறது. சோதனைக்குப் பின்னரே பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோன்று பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.
இதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சோதனை நடக்கிறது. பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களும் சோதனைக்குப் பின்னரே வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம் மூலம் வெளியூர் செல்லும் பயணிகளும், சென்னை திரும்பும் பயணிகளும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு நடத்தப்படும் சோதனையில் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு காய்ச்சல் அறிகுறி 102 டிகிரி இருப்பது தெரியவந்தது. குடும்பத்துடன் பெரம்பலூர் செல்வதற்காக கோயம்பேடு வந்தபோது பரிசோதனையில் அச்சிறுவனுக்குக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரத்த மாதிரி பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவரது ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்படும் என மருத்துவர் தகவல் அளித்துள்ளார். குடும்பத்தினரும் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் செய்யக்கூடிய இந்த மருத்துவப் பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று பயணிகள் தெரிவித்தனர்.