

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் குழு செய்தது.
கரோனா பரவல் மற்றிம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் 6 மூத்த நீதிபதிகள் நேற்று தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நீதிமன்ற வளாகங்களிலும் விரிவுபடுத்த நீதிபதிகள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை நீதிமன்ற நேரம் தொடங்குவதற்கு முன்பாக, சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் செல்வகுமார், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் யமுனா ஆகியோர் மேற்பார்வையில் 20 பணியாளர்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
க்ரைசால் கரைசலைக் கொண்டு ஒரு லாரி ஸ்பிரேயர், 2 பவர் ஸ்பிரேயர், 2 கம்ப்ரஸர் ஸ்பிரேயர், கைப்பிடிகள் சுத்தம் செய்வதற்காக 5 வாளிகள் ஆகியவற்றின் மூலம் கரைசல் அடிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.