

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற துறை சார்ந்த அலுவலர்கள் ஆட்சியர் அழைத்தும் அதையும் கவனிக்காமல் செல்போனில் மூழ்கியது மனுதாரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமாகி 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இதுவரை 16 பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன் மூலம் 680 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதில் 3945 மனுக்கள் ஏற்கப்பட்டும், 1,589 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 1,359 மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நடை பெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் மனுதாரர்களிடமிருந்து கோரிக்கை மற்றும் குறை மனுக்களை ஆட்சியர் கிரண் குராலா, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சார் ஆட்சியர் ஆகியோர் பெற்று, மனுவில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் துறை சார்ந்த அலுவலர்களை ஒலிப் பெருக்கி வாயிலாக அழைத்தனர்.
அப்போது பெரும்பாலான துறைசார் அலுவலர்கள், தங்களது செல்போன்களில் சமூக வலைதளங்களில் மூழ்கி இருந்தனர். விழிப்புடன் இருந்த அலுவலர்கள் சிலர், 'உங்களைத்தான் அழைக் கின்றனர்' என்று கூறவே, அந்த நபர்கள் எழுந்து சென்று, ஆட்சியரிடம் சென்று மனுதாரரின் மனுக்களைப் பெற்றுக் கொண்டு இருக்கைக்கு திரும்பி, மறுபடியும் செல்போனில் மூழ்கினர்.
இதைக் கண்ட மனுதாரர்கள் சிலர், "எங்கள் பகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தால் தீர்வு கிடைப்பதில்லை என்பதால் தான், ஆட்சியரிடம் நேரில் வந்து கொடுக்கிறோம்.
ஆட்சியர் முன்னிலையிலேயே இவர்கள் இப்படி நடந்து கொண்டால் எங்களது கோரிக்கைக்கு எப்படி தீர்வு கிடைக்கும்?'' என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
"ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்த போது, நீண்ட தூரம் சென்று மனு கொடுக்க வேண்டும் என்பதால் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த பல கிராமத்தினர் மக்கள் குறை கேட்புக் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்தனர்.
தற்போது தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளதால், இந்த குறை தீர்க்கும் முகாமில் பங்கேற்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இக்கூட்டத்தில் பங்கேற்கும் அலுவலர்களோ அதைப்பற்றி சிறிதளவுக் கூட அக்கறையின்றி ஏனோதானாவாக செயல்படுவது வேதனையாக இருக்கிறது'' கூட்டத்தில் மனு கொடுக்க வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப் பஞ்சாயத்து என்ற அமைப்பின் நிர்வாகி கங்கா சேகர் தெரிவித்தார்.
இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று அரசு செயலர் ஏற்கெனவே சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அடையாள அட்டையின்றியே அரசுக் கூட்டங்களில் அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டம், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் போன்ற வற்றில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள் அடையாள அட்டைகள் அணிய வேண்டும்; கூட்டம் முடியும் வரை செல் போன்கள் பயன்படுத்த ஆட்சியர் தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.