அடையாள அட்டை அணியாதவர்கள் மீது நடவடிக்கை; விழுப்புரம் ஆட்சியரின் உத்தரவை பொருட்படுத்தாத அரசு அலுவலர்கள்

ஆட்சியர் மற்றும் ஒரு சில அலுவலர்கள் தவிர மற்றவர்கள் அடையாள அட்டை அணியாமல் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆட்சியர் மற்றும் ஒரு சில அலுவலர்கள் தவிர மற்றவர்கள் அடையாள அட்டை அணியாமல் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Updated on
1 min read

அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அரசு அலுவலர்கள் பொருட்படுத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

அரசு ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை அணிவதில்லை என்று புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் 16.7.2018 அன்று அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனாலும் அரசு ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நேரத்தில் அடையாள அட்டைகளை அணிவதில்லை என்று புகார்கள் வந்தன. இது அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு செயலாளர் சுவர்ணா, கடந்த மாதம் அரசு துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம் எனவும், பணி நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணியாமல் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கடந்த 9-ம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் கேட்டபோது, ஒரு வார காலத்திற்குள் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிய வேண்டும் எனவும், இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால், ஒருவாரம் கடந்து நேற்று (மார்ச் 16) கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் மற்றும் ஒரு சில அலுவலர்கள் தவிர மற்றவர்கள் ஆட்சியரின் உத்தரவை பொருட்படுத்தாமல் கூட்டத்தில் பங்கேற்றதை காண முடிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in