கரோனா  முன்னெச்சரிக்கை: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் -29 நடக்கவிருந்த திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் பொறுப்பு வகித்த பேராசிரியர் அன்பழகன் கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது மறைவை அடுத்து திமுக பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழு வரும் மார்ச் 29 ஞாயிற்றுக்கிழமை காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடெங்கும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கல்விகள், பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவிடப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள், வழிபாட்டுத்தளங்களில் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து திமுகவும் தனது பொதுக்குழுவை ஒத்தி வைத்துள்ளது. மார்ச்.29 அன்று நடக்க உள்ள பொதுக்குழுவை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“கடந்த மார்ச் 15-ம் தேதி அறிக்கையின் வாயிலாக திமுக பொதுக்குழு கூட்டத்தில், மார்ச் 29 அன்று காலை 10 மணி மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச் 16 கடிதத்தின் வாயிலாக கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விழைவதாகவும் எனவே அவர் தமது பொறுப்பில் இருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு மார்ச் 29 அன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு அடிப்படையில், ஏற்கனவே மார்ச் 29 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கட்சி பொதுக்குழு ஒத்தி வைக்கப்படுவதோடு, தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற மார்ச் 31-ம் தேதி வரை ஒத்தி வைத்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in