ரிமோட் குண்டு வெடித்த வீட்டில் விசாரணை மேற்கொண்ட போலீஸார். (உள்படம்) திமுக பிரமுகர் வேலுச்சாமி.படங்கள்: கிருஷ்ணமூர்த்தி
ரிமோட் குண்டு வெடித்த வீட்டில் விசாரணை மேற்கொண்ட போலீஸார். (உள்படம்) திமுக பிரமுகர் வேலுச்சாமி.படங்கள்: கிருஷ்ணமூர்த்தி

மதுரையில் திமுக முன்னாள் எம்எல்ஏ வீடு முன்பு ரிமோட் மூலம் குண்டுவெடிப்பு: இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை

Published on

மதுரையில் திமுக முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமியின் வீட்டின் முன் மர்ம நபர்கள் ரிமோட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் திமுக செயலராக இருந்தவர் வேலுச்சாமி. முன்னாள் எம்எல்ஏவான இவர் தற்போது திமுக பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். மதுரை அண்ணா நகர் முதல் கிழக்கு குறுக்குத் தெருவில் வசிக்கிறார்.

நேற்று மதியம் வேலுச்சாமி தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். மதியம் 2.20 மணிக்கு வாசல் பகுதியில் திடீரென குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. வேலுச்சாமி வெளியே வந்து பார்த்தபோது கேட்டுக்கு வெளியே தரையில் வெடிகுண்டு வெடித்து சிதறிக் கிடந்தது. அந்த இடத்தில் பேட்டரி, வயர்கள், வெடிபொருட்கள் சிதறிக் கிடந்தன.

தகவலறிந்த காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், துணை காவல் ஆணையர் கார்த்திக் ஆகியோர் வேலுச்சாமியிடம் விசாரணை நடத்தினர். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லல்லி கிரேஸ் தலைமையில் காவல் ஆய்வாளர் ரமணி உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் சிங்கன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in