Published : 17 Mar 2020 07:56 AM
Last Updated : 17 Mar 2020 07:56 AM

ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 வைரஸ் எதிரொலி: கரூரில் ஜவுளி ஏற்றுமதி கடுமையான பாதிப்பு; ரூ.100 கோடிக்கும் அதிகமான சரக்குகள் தேக்கம்; டன் கணக்கில் குவிந்த காய்கறிகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சந்தையில் தேங்கியுள்ள மலைக் காய்கறிகள்.

கரூர்/கோவை

ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் கரூரில் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடிக்கும் அதிகமான சரக்குகள் தேங்கியுள்ளதாக ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

கரூரில் நூற்றுக்கணக்கான ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, வீட்டு உபயோக ஜவுளிகள் எனப்படும் திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள், கையுறைகள், ஏப்ரான்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

இதன்மூலம் கரூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்றுவருகின்றனர். ஜவுளி ஏற்றுமதி தொழிலில் இந்தியாவுக்குப் போட்டியாகத் திகழும் சீனாவில் கோவிட்-19 வைரஸ் பரவியதால் சீன ஆர்டர்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு சீனாவுக்கு அளிக்கப்பட்ட குறிப்பிட்ட சதவீத ஆர்டர்கள் இந்தியாவுக்கு கிடைத்து வந்தன.

இதனால் கரூரில் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவிட்-19 வைரஸ் தாக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. இதனால், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஜவுளி விற்பனை நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. மேலும், அந்நாடுகளில் ஜவுளி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆர்டர்களைப் பெறுவதற்குக் கூட பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கப்பல்களில் தேங்கியுள்ளன

கரூரில் உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக ஜவுளிகள் 95 சதவீதம் கன்டெய்னர்கள் மூலம் கப்பலில் மூலம் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அனுப்பப்பட்ட சரக்குகளை பெறுவதற்குக் கூட அங்குள்ள நிறுவனங்களில் ஊழியர்கள் இல்லாததால், சரக்குகள் கப்பலில் தேங்கியுள்ளன.

மேலும், சரக்குகள் அனுப்புவதை நிறுத்தி வைக்குமாறும் அந்நிறுவனங்கள் தகவல் அனுப்பிஉள்ளன. இதனால், கரூரிலும் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான சரக்குகள் தேங்கியுள்ளன. தற்போது ஐரோப்பிய நாடுகளில் வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆர்டர்களுக்கான தொகையைப் பெறுவதிலும் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் ஆர்.ஸ்டீபன்பாபு கூறியதாவது: சீனாவில் கோவிட்-19 வைரஸ் பரவியதால் அந்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ஆர்டர்களில் இருந்து குறிப்பிட்ட சதவீத ஆர்டர்கள் இந்தியாவைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்குக் கிடைத்தன. இது தொடர்ந்து கிடைக்கும், ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவிட்-19 வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதால் அந்நாடுகளுக்கு அனுப்பிய ஜவுளி ரகங்கள் கப்பல்களில் இருந்து இறக்கப்படாமல் உள்ளன. சரக்குகளை அனுப்ப வேண்டாம் என கூறியுள்ளதுடன், ஆர்டர்கள் பெறுவதையும் நிறுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் வங்கிகள் முழுமையாக செயல்படாததால் ஆர்டர் செய்த தொகையைக் கூட பெற முடியாத நிலை உள்ளது.

கரூரில் இருந்து ஜவுளி ரகங்களை இறக்குமதி செய்யும் வெளிநாடுகள், நாங்கள் மீண்டும் கேட்கும் வரை புதிதாக ஜவுளி ரகங்களை அனுப்ப வேண்டாம் எனக் கூறியுள்ளதால், கரூரில் ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் உற்பத்தியை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படும். வேலைவாய்ப்பு இன்றி தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்றார்.

கேரளாவில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் வருகை குறைந்து, மேட்டுப்பாளையம் காய்கறி சந்தையில் டன் கணக்கில் மலைக் காய்கறிகள் மற்றும் வாழைத்தார்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் வழக்கமான வியாபாரம் இல்லாமல் சந்தைகள் வெறிச்சோடின.

தினமும், 1,000 டன் வரை காய்கறிகளும், 500 டன் வரை வாழைத்தார்களும் தேக்கமடைந்து வருவதாக தெரிவிக்கும் வியாபாரிகள், இதனால் இவற்றின் விலையும் சரிந்து வருவதாக கூறுகின்றனர்.

நேந்திரன் வாழை கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விலை போவதாகவும், நீலகிரி கேரட் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விலைபோன நிலையில் தற்போது ரூ.25 முதல் ரூ.35 வரை மட்டுமே விற்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x