

வங்கிகளின் மின்னணுப் பரிவர்த்தனை குறித்து கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 4 பொதுத் துறை வங்கிகள் சார்பில் 33 நிதி கல்வியறிவு மற்றும் கடன் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கிராமப்புற மக்கள் 1.37 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மாநில அளவி லான வங்கி கூட்டமைப்பு அதிகாரிகள் கூறியதாவது:
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, மின்னணு (டிஜிட்டல்) பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால், கிராமப்புற மக்களிடையே இதுகுறித்து போதிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை.
குறிப்பாக, டெபிட் கார்டு மூலம் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பது, இணையதளம் மூலமான வங்கி பரிவர்த்தனைகள், ஆர்டிஜிஎஸ், நெஃப்ட் மற்றும் செயலிகள் மூலம் மூலம் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை அம்மக்களை சென்றடையவில்லை.
ரிசர்வ் வங்கி உத்தரவு
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண, கிராமப் பகுதிகளில் நிதிகல்வியறிவு மற்றும் கடன் ஆலோசனை மையங்களை அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவை தமிழகம் முழுவதும் 30 மாவட்டங்களில் 33 மையங்களை அமைத்துள்ளன. இதைத்தவிர, தமிழ்நாடு கிராம வங்கி28 மையங்களை நிறுவியுள்ளது.
சிறப்பு முகாம்கள்
இந்த மையங்கள் மூலம் மாதத்துக்கு 2 முகாம்களை நடத்தி மின்னணு பரிவர்த்தனைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும். மேலும் விவசாயிகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மூத்தக் குடிமக்கள் ஆகியோருக்கென சிறப்பு முகாம்களை நடத்தவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பிரதி மாதம் 3-வதுவெள்ளிக்கிழமை இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம்கள் மூலமாக இதுவரை1.37 லட்சம் கிராமப்புற மக்கள் பயனடைந்துள்ளனர். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.