

கோவிட்-19 பரவுவதை கருத்தில் கொண்டு சோப், திரவ சோப் மற்றும் கைகழுவும் திரவம் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்பனைசெய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:
கோவிட்-19 பரவுவதால், விமானம், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நோய் தாக்கத்தைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வருகின்றனர்.
மேலும், நோய் தொற்றைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் சுகாதார அறிவுரைகளை கைபேசி வாயிலாக விளம்பரம் செய்து வருகிறது.
தேவை அதிகரிப்பு
அடிக்கடி கைகளை சோப், திரவ வடிவிலான சோப், கைகழுவும் திரவம் (சானிடைசர்) போன்றவற்றைக் கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இப்பொருட்களுக்கு சந்தையில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டுசில விற்பனையாளர்கள் இப்பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகத் தெரிய வருகிறது.
எனவே, முகக் கவசம், சோப்,திரவ சோப், கைகழுவும் திரவம் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில், பாக்கெட்களில் விற்பனை செய்யும்போது சட்டமுறை எடையளவு விதிகள்படி, தயாரிப்பாளர், பொதிபவரின் முழு முகவரி, பொருளின் அளவு அல்லது எண்ணிக்கை, நிகர அடை அல்லது அளவு, பொருள் தயாரிக்கப்பட்ட மாதம், ஆண்டு, காலாவதியாகும் மாதம், ஆண்டு, அதிகபட்ச, சில்லறை விற்பனை விலை, புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை தெளிவாக பாக்கெட்களில் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும்.
தொடர் ஆய்வு
இந்த விதிகளை மீறி பொட்டலமிடுபவர்கள் மீதும், பொருளில் குறிப்பிட்டுள்ள அதிக பட்ச சில்லறை விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்யும்கடைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள், பொருட்களில் குறிப்பிட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்கும் நிறுவனங்கள், கடைகள், மருந்துக்கடைகள் குறித்து, ‘TNLMCTS’ என்ற கைபேசிசெயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம்.
மேலும், ‘clmchennaitn@gmail.com’ என்ற இ-மெயில் முகவரி மூலமாகவோ, 044-24321438 என்ற தொலைபேசி வாயிலாகவோ புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.