Published : 17 Mar 2020 07:14 AM
Last Updated : 17 Mar 2020 07:14 AM

என்பிஆர் குறித்து பேரவையில் விவாதம் நடத்தப்பட்டுள்ளதால் அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை: ஸ்டாலின் கோரிக்கைக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

சிஏஏ, என்பிஆர் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். பேரவையில் இதுகுறித்து விவாதம் நடத்தப்பட்டுள்ளதால், அனைத்துக் கட்சி கூட்டம் தேவை இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அச்ச உணர்வில் மக்கள்

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கடந்த 14-ம் தேதி முஸ்லிம் சமுதாய பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதில் கலந்துகொண்ட நிர்வாகிகளின் சந்தேகங்கள், அவர்கள் கூறிய கருத்துகள், அதற்கு தலைமைச் செயலாளர் அளித்த பதில் ஆகியவை குறித்து அவையில் தெரிவிப்பது அரசின் கடமை.

நாடு முழுவதும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மக்களும் அச்ச உணர்வுடன் இருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முதல்வர் விவாதித்தால் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழக முஸ்லிம் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் பங்கேற்ற நிர்வாகிகள் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவை குறித்த கருத்துகளை தெரிவித்தனர். சட்டப்பேரவை விவாதத்தை ஒட்டியும் கருத்துகளை தெரிவித்தனர்.

அவர்களிடம் மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்), என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ ஆகியவற்றின் நிலை குறித்தும், மாநில அரசு அதன் அதிகார வரம்புக்கு உட்பட்டு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும் தலைமைச் செயலாளர் எடுத்துரைத்தார்.

‘சிஏஏ என்பது, வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியிருப்போருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தம். இதனால் இந்திய குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளதை தலைமைச் செயலாளர் எடுத்துக் கூறினார்.

என்பிஆர் புதிது அல்ல

‘குடியுரிமை விதிகள் 2003-ன் கீழ் நாடு முழுவதும் கடந்த 2010-ல் என்பிஆர் கணக்கெடுப்பு நடைபெற்றது. எனவே இது புதிது அல்ல. அதன்பிறகு 2015-ல் தேவையானதை சேர்க்கலாம், நீக்கலாம் என்று 3 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன’ என்பதையும் தலைமைச் செயலாளர் தெளிவுபடுத்தினார்.

இந்த 3 புதிய அம்சங்கள் குறித்து மத்திய அரசிடம் நாம் விளக்கம் கேட்டுள்ளோம். அதை ஒட்டியே நாடாளுமன்றத்தில் கபில்சிபல் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த 12-ம் தேதி எழுப்பிய கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

‘‘என்பிஆர் தொடர்பாக எந்த ஆவணமும் கேட்கப்படுவது இல்லை. பொதுமக்களிடம் ஆவணங்கள் இல்லை எனில், அதற்கான பதில் அளிக்கவும் தேவை இல்லை. ‘சந்தேகத்துக்குரியவர்’ என்ற பிரிவும் என்பிஆரில் இடம்பெறாது. எனவே என்பிஆர் குறித்து அச்சப்பட தேவை இல்லை’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விவாதிக்க முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

உணர்வுபூர்வ பிரச்சினை

சட்டப்பேரவையில் இதுகுறித்த சந்தேகங்கள், கருத்துகளை உறுப்பினர்கள் கூறும்போதும், ‘சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்போம்’ என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். தொடர் விவாதத்திலும் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, அனைத்துக் கட்சி கூட்டம் தேவையா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இது உணர்வுபூர்வ பிரச்சினை என்பதால், முதல்வர் உத்தரவின்படி பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுபான்மையின மக்கள் எங்கள் உறவு. எங்கள் ரத்தம். அவர்களும் இந்த நாட்டின் பிள்ளைகள் என்பதால் அச்சப்பட தேவை இல்லை.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x