

ரஜினி மக்கள் மன்றத்தினரின் உதவியால், திருநெல்வேலி குறிச்சி பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை குறைந்து வரும் சூழலில், அப்பள்ளிகளில் தனியார்பங்களிப்புடன் புனரமைப்பு பணிகளை செய்து, மாணவர்களை ஈர்க்கமுயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் குறிச்சியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. 1936-ல் தோற்றுவிக்கப்பட்ட இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 70 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
‘நல்லதை பகிர்வது நம் கடமை’ என்ற வாட்ஸ்அப் குழு மூலம் இப்பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மூலம் ரஜினி மக்கள் மன்றத்தின் பார்வை இப்பள்ளியின் பக்கம் திரும்பியது.
பள்ளியின் முன்பக்கத்தில் ரயில்இன்ஜின், பெட்டிகளை போல்தத்ரூபமாக வண்ணம் பூசப்பட்டுள்ளது. காந்தியடிகள், நேரு,அப்துல் கலாம் போன்ற தலைவர்களின் படங்களும் வரையப்பட்டுள்ளன. மூலிகைத் தோட்டம்அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி மாணவி பி.ஆனந்தி என்பவருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது.
இப்பணிகளை நெல்லை ரஜினி மக்கள் மன்ற இணைச் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் தனதுசொந்தச் செலவில் மேற்கொண்டுள்ளார். புதுப்பொலிவு பெற்ற பள்ளியை ஆனந்தி திறந்து வைத்தார்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘ரஜினி ரசிகர்களின் மக்கள் சேவையை உணர்த்தும் பொருட்டு மாநகராட்சி பள்ளியை புதுப்பொலிவாக்கியுள்ளோம். இதுபோல், திருநெல்வேலி மாவட்டம் உவரி மற்றும் தருவையிலுள்ள அரசுப் பள்ளிகளில் நலப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார். அ. அருள்தாசன்