Published : 16 Mar 2020 10:06 PM
Last Updated : 16 Mar 2020 10:06 PM

திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்? பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி

கோப்புப் படம்.

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் வருவது உறுதியாகிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், பொருளாளர் பதவிக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

பொதுச் செயலாளர் பதவியும் திமுகவும்:

திமுக அடிப்படையில் மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாக தொடங்கப்பட்ட கட்சி. திராவிடர் கழகத்திலிருந்து திமுக பிரிந்தபோது அடிப்படையில் அக்கட்சியின் நடைமுறைகளை சுவீகரித்துக் கொண்டது. பொதுக்குழு, அமைப்புக் குழு, சட்டத்திட்டக் குழு, நிதிக்குழு, கட்சியின் பொதுச் செயலாளர், தலைவர் பதவிகள் கொண்டு வரப்பட்டன.

ஆனால், தலைவர் பதவியை பெரியார்தான் ஏற்க வேண்டும் என்பதால் அப்பதவியை அண்ணா காலியாக வைத்திருந்தார். கட்சியின் பொதுச் செயலாளராக அண்ணா இருந்தார். இதனால் கட்சியில் பொதுச் செயலாளர் பதவி சக்தி வாய்ந்ததாக இருந்தது. 1951-ம் ஆண்டு பொதுச் செயலாளராக சென்னை மாநாட்டில் பொறுப்பேற்ற அண்ணா ஐந்தாண்டுகள் மட்டுமே பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தார்.

1956-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் அண்ணா கட்சி நிறுவனத் தலைவராக மதிக்கப்பட்டார். கட்சியில் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தபின் அவரது தலைமையை ஏற்பதில் தயக்கம் காட்டக்கூடாது என்று அண்ணா அந்த மாநாட்டில் பேசினார். புகழ்பெற்ற வசனமான 'தம்பி வா தலைமை ஏற்க வா!' என்று அண்ணா அழைத்ததும் இந்த மாநாட்டில்தான்.

இதன் பின்னர் அண்ணா மறையும் வரையிலும் நெடுஞ்செழியனே திமுக பொதுச் செயலாளராக இருந்தார். பொதுச் செயலாளர் பதவி, திமுகவில் சக்தி வாய்ந்த பதவியாக இருந்தது. அண்ணாவின் மறைவுக்குப் பின் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் நெடுஞ்செழியன் ஒதுங்கியே இருந்தார். அமைச்சரவையிலும் சேரவில்லை. திருத்தப்பட்ட அமைச்சரவையிலும் சேரவில்லை.

பெரியார் முதல் பலரும் பேசிய பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியன் தொடர்வது என்றும், ஆட்சியில் முதல்வராகவும், கட்சியில் காலியாக உள்ள தலைவர் பதவியை கருணாநிதி ஏற்பது என்றும் முடிவானது. அதன் பின்னர் எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் அதற்குப் பிறகு நெடுஞ்செழியன் திமுகவிலிருந்து விலகிய பின்னர் 1977-ல் அன்பழகன் பொதுச் செயலாளர் ஆனார்.

அன்பழகன் மறைவுக் காலம் வரை அவரே பொதுச்செயலாளர். ஆனால் அண்ணா மறைவுக்குப் பின் கருணாநிதி தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் தலைவர் பதவிக்கு மரியாதை கூடியது. கட்சி அமைப்பு ரீதியாக பொதுச் செயலாளர் பதவி வலுவானதாக இருந்தாலும், கட்சியின் தலைவரே அதிகாரமிக்கவராக இருந்ததால் கருணாநிதியைத் தொடர்ந்து ஸ்டாலினும் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

தற்போது அன்பழகன் மறைவுக்குப் பின் கட்சியின் மூத்த தலைவர் என்கிற முறையில் துரைமுருகன் அப்பதவிக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதற்கேற்ப அவர் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதே நேரம் பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாக திமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, ஆ.ராசா, பொன் முடி உள்ளிட்டோர் பொருளாளர் பதவி ரேஸில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் டி.ஆர்.பாலு மூத்த தலைவர் என்கிற அடிப்படையில் பொருளாளர் பதவியில் முன்னணியில் உள்ளார். எ.வ.வேலு செல்வாக்கு மிக்க தலைவராக வாய்ப்பில் உள்ளார். ஆ.ராசா, ஐ.பெரியசாமி இருவருக்கும் உள்ள ஆதங்கத்தைப் புரிந்து பேசி வேறு ஏதேனும் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறுகின்றனர். இறுதியாக ரேஸில் டி.ஆர்.பாலுவும், எ.வ.வேலுவும் உள்ளனர். செல்வாக்கா? சீனியாரிட்டியா என்பது மார்ச் 29-ம் தேதி அன்று தெரியும்.

இதனிடையே கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், 29-ம் தேதி பொதுக்குழு கூடுவது சந்தேகம் என ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x