

கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோவிட்-19 விழிப்புணர்வு கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.
இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மும்முரமாக செயல்பட்டுவருகிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க பொதுமக்கள் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்காக ஒரு டாக்டர் மற்றும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்க மருத்துவப் பணியாளர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் மருத்துவமனை நிர்வாகம் செய்துள்ள ஏற்பாடுகளை திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி பார்வையிட்டார்.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்கள் கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கும் டாக்டர்.
திண்டுக்கல் பேருந்துநிலையத்தில் அரசு பேருந்துகளில் கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி இன்று நடைபெற்றது.
திண்டுக்கல்லில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கைகளை கழுவி சுத்தம் செய்ய ஏதுவாக பள்ளி வளாகத்தில் சோப்பு மற்றும் தண்ணீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகள் தங்கள் கைகளை சுத்தம் செய்த பிறகே வகுப்புகளுக்குச் சென்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருத்துவமுகாம் அமைக்கப்பட்டு சுகாதாரப் பணியாளர்கள் மார்க்கெட்டிற்கு வந்தவர்களுக்கு கிருமிநாசினி வழங்கி கைகளை சுத்தம் செய்ய செய்தனர். இங்கு நிரந்தமாக மருத்துவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பழநி கோட்டாட்சியர் தலைமையில் கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் நகர வணிகர்கள், தியேட்டர், திருமண மண்டப உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பழநி:
பழநி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுவருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோவிட்-19 வைரஸ் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்காக மலைக்கோயில் செல்லும் வழிகளான ரோப்கார், இழுவை ரயில் நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் மருத்துவமுகாம்கள் அமைக்கப்பட்டு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பக்தர்கள் பரிசோதிக்கப்படுகின்றனர்.
பரிசோதனையில் 100 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உடல் வெப்பநிலை இருந்தால் மட்டுமே மலைக்கோயில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 100 டிகிரிசெல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருக்கும் பக்தர்களுக்கு அனுமதிமறுக்கப்படுகிறது. இவர்களை திருப்பி அனுப்புகின்றனர். கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோட்டாட்சியர் (பொறுப்பு) சிவக்குமார் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில், கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாபயணிகள் அனைவரும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகேயுள்ள சோதனைச்சாவடியில் மருத்துவபரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பதாதைகள், துண்டுபிரசுங்கள் வினியோகிக்கப்படும். அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இருமல், காய்ச்சல், உடல் சோர்வு இருந்தால் பொதுமக்கள் அரசு ஆரம்பசுகாதாநிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகவும் வேண்டுகோள்விடுக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் வகுப்புகளுக்கு செல்லும் முன் கைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்.