மதுரையில் முதல்வர் பங்கேற்கவிருந்த பெரியாறு குடிநீர் திட்டப்பணி தொடக்க விழா தள்ளிவைப்பு: ‘கோவிட்-19’ வைரஸ் அச்சத்தால் நடவடிக்கை 

மதுரையில் முதல்வர் பங்கேற்கவிருந்த பெரியாறு குடிநீர் திட்டப்பணி தொடக்க விழா தள்ளிவைப்பு: ‘கோவிட்-19’ வைரஸ் அச்சத்தால் நடவடிக்கை 
Updated on
1 min read

‘கோவிட்-19’ வைரஸ் நோய் பரவத் தொடங்கியுள்ளதால் மதுரையில் முதல்வர் தொடங்கி வைக்க இருந்த பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி தொடக்க விழா தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வைகை-1, வைகை-2 மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் போன்றவற்றால் மதுரையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியவில்லை. அதனால், மாநகராட்சி குடிநீர் தேவையை போக்குவதற்கு பெரியாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டு வர ரூ.1,020 கோடியில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டம், பகுதி-1, பகுதி-2, பகுதி-3 ஆகிய கட்டமாக நிறைவேற்றப்படுகிறது. இதில், பகுதி-1, பகுதி-2 ஆகியவை டெண்டர்விடப்பட்டு ஒர்க் ஆர்டர் வழங்கப்பட்டுவிட்டன. பகுதி-3 விரைவில் டெண்டர்விடப்படுகிறது.

அதனால், ஒரு வாரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி மதுரை வந்து பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணி தொடங்கி வைப்பதாக இருந்தது.

இதற்காக, தமுக்கம் மைதானத்தில் விழாவை நடத்துவதற்கு மாநகராட்சி ஏற்பாடுகளை செய்து வந்தது. தற்போது ‘கோவிட்-19’ வைரஸ் நோய் தமிழகத்தில் வேகமாகப் பரவுவதால் மக்கள் பெரும் கூட்டமாக பங்கேற்கும் அரசு விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகள், பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் போன்றவை தற்காலிக தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால், மதுரையில் முதல்வர்பழனிசாமி பங்கேற்கவிருந்த பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிதொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘‘கோவிட்-19’ வைரஸ் பரவுவதால் 50 பேருக்கு மேல் வரும் கூட்டங்கள், விழாக்கள் நடத்தக்கூடாது என்று அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது.

அதை பின்பற்றி, முதல்வர் மதுரையில் பங்கேற்க இருந்த பெரியாறு கூ்டடுக்குடிநீர் திட்டப்பணி தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மாநகராட்சியில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டமும் ரத்து செய்வதற்கு ஆலோசித்து வருகிறோம். ‘கோவிட்-19’ அச்சம் அடங்கியப்பிறகு பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய உள்ளோம், ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in