Published : 16 Mar 2020 03:02 PM
Last Updated : 16 Mar 2020 03:02 PM

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு சட்டத் திருத்தம்: பாமகவுக்கு வெற்றி; ராமதாஸ்

பட்ட மேற்படிப்புகளிலும் தமிழ் வழிக் கல்வியை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 16) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கில வழிக் கல்வி மீதான மோகத்தைப் போக்கி, தமிழ் வழிக் கல்வியைக் கூடுதலாக ஊக்குவிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திருத்தம் வரவேற்கத்தக்கது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையங்களின் மூலம் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் காளான்களாய் பெருகிய நிலையில், ஆங்கில வழிக் கல்வி மீது பெருக்கெடுத்த மோகத்தைத் தணித்து தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டம் கடந்த 2010-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

ஆனால், ஒரு பணிக்குத் தேவைப்படும் அடிப்படைக் கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தாலே, 20% இட ஒதுக்கீட்டைப் பெறலாம் என்று அப்போதைய சட்டத்தில் கூறப்பட்டிருந்ததால், அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பணிகளுக்கு பட்டப்படிப்பு அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், ஏற்கெனவே பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் படித்த பலரும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்துவிட்டு, அரசுத் துறை வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இதனால், இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படை நோக்கமே சிதைக்கப்பட்டுவிட்டது.

இதைத் தடுக்கும் வகையில், பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் இந்த 20% இட ஒதுக்கீடு கிடைக்கும் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது.

"பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழ் வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதுதான் மோசடிகளைத் தடுக்கும்; தமிழ் வழிக் கல்வி வளர்ச்சிக்கு கண்டிப்பாக வழிவகுக்கும்" என்று கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருந்தேன்.

அதை நிறைவேற்றும் வகையில் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழர்கள் நலனுக்காகவும் பாமக முன்வைத்த இன்னொரு கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது. இது பாமகவுக்குக் கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகும்.

தமிழக சட்டப்பேரவையில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் இனி ஆறாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழில் எழுதியவர்கள் மட்டும்தான், தமிழ் வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டைப் பெற முடியும். இதன் மூலம் ஆங்கில வழிக் கல்வி மீதான மோகம் குறைந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தமிழ் வழியில் பயில முன்வருவார்கள். அதன் மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரித்து, பல்வேறு துறைகளில் தமிழக மாணவர்கள் சாதனை படைக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் வாய்ப்பு ஏற்படும்.

அதுமட்டுமின்றி, புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் பள்ளிக் கல்வியை ஆங்கிலத்தில் பயின்று, பட்டப் படிப்பை மட்டும் தமிழில் படித்து விட்டு, 20% இட ஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்படும். பள்ளிக் கல்வி முதல் தமிழில் படித்த உண்மையான தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் பயனடைவார்கள். அந்த வகையில் இந்தச் சட்டத் திருத்தம் தேவையை உணர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டப் படிப்பு வரை மட்டுமே தமிழ் வழிக் கல்வி வழங்கப்படுகிறது. இதனால் பட்ட மேற்படிப்பு மற்றும் அதற்கும் கூடுதலான கல்வித் தகுதி கொண்ட பணிகளுக்கு 20% இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இதனால் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், இடைக்கால ஏற்பாடாக பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்;

நிரந்தர ஏற்பாடாக பட்ட மேற்படிப்புகளிலும் தமிழ் வழிக் கல்வியை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x