

கொச்சியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், நுரையீரல் விமானத்தில் கொண்டுவரப்பட்டு அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகாராஷ்டிர மாநில இளைஞருக்கு பொருத்தப் பட்டது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரணவ் (19). கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது சாலை விபத்தில் சிக்கியதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரணவ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரணவ் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக பெற்றோர் தெரிவித்தனர். அதன்படி டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து மாணவனின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இதயம் மற்றும் கண்களை எடுத்தனர். கேரள மாநில மருத்துவமனையில் உடல் உறுப்புகள் வேண்டி சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு சிறுநீர கங்கள், கல்லீரல் மற்றும் கண் கள் பொருத்தப்பட்டன. இதயம் மற்றும் நுரையீரல் யாருக் கும் பொருந்தாததால் தமிழகத் துக்கு கொடுக்க முடிவு செய்யப் பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை டாக்டர்கள், தங்களுடைய மருத் துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு மகா ராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தனர். அங்கிருந்து உத்தரவு வந்ததும் டாக்டர்கள் குழுவினர் இதயம் மற்றும் நுரையீரலை பெறுவதற்காக கொச்சி மருத்துவமனைக்கு சென்றனர்.
இதயம் மற்றும் நுரையீரலை பெற்றுக் கொண்ட டாக்டர்கள் குழுவினர் மருத்துவமனையில் இருந்து நேற்று பகல் 12.12 மணிக்கு புறப்பட்டு கொச்சி விமான நிலையம் சென்றனர். அங்கிருந்து சிறப்பு விமானத்தில் பகல் 12.40-க்கு ஏறி சென்னைக்கு பிற்பகல் 2.08 மணிக்கு வந்தனர். விமான நிலைய வளாகத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் டாக்டர்கள் குழுவினருடன் பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டது. ஆம்புலன்ஸ் விரைவாக செல்வதற்காக போக்குவரத்து போலீஸார் தேவையான வசதி களை செய்திருந்தனர். அடை யாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவ மனைக்கு பிற்பகல் 2.20 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தடைந்தது.
டிரைவருக்கு பாராட்டு
மருத்துவமனையில் தயார் நிலை யில் இருந்த டாக்டர்கள் குழுவினர் தானமாக கிடைத்த இதயம் மற்றும் நுரையீரலை அறுவை சிகிச்சை மூலம் மகாராஷ்டிர மாநில இளைஞருக்கு பொருத்தினர். சென்னை விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஞானபிரகாஷ் (45) என்ற டிரைவரை அனைவரும் பாராட்டினர்.