

கரோனா வைரஸைக் கண்டறிய தமிழகத்தில் இரண்டு இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் கரோனா வைரஸ் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''சென்னையில் இயங்கி வரும் கிங் இன்ஸ்டிடியூட் எனப்படும் கிங் தடுப்பு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் கொவிட்-19 ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் ஆய்வுக்கூடம் செயல்படும்.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 52 இடங்களில் ஆய்வுக்கூட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் 5 இடங்களிலும், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்களிலும் தெலங்கானாவில் ஒரு இடத்திலும் ஆய்வுக்கூட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு தேசிய நச்சு நுண்மவியல் கள நிறுவனம், மைசூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஹாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம், ஷிமோகா மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றில் இந்த ஆய்வுக்கூடங்கள் இயங்கும்.
கேரளாவில் தேசிய நச்சு நுண்மவியல் கள நிறுவனம், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி, கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி, ஆந்திராவில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனம், விசாகப்பட்டினம் ஆந்திரா மருத்துவக் கல்லூரி, அனந்தப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் இந்த ஆய்வுக்கூடங்கள் இயங்கும்.
தெலங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் காந்தி மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸுக்கான ஆய்வுக்கூடம் செயல்பட்டு வருகிறது”.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.