Published : 16 Mar 2020 12:47 PM
Last Updated : 16 Mar 2020 12:47 PM

ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களே உஷார்: உங்கள் பணம் இப்படியும் களவாடப்படலாம்; ரூ.1 லட்சத்துக்கும் மேல் பணத்தை இழந்த முதியவர்

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பணம் எடுத்துக் கொடுப்பது போல் உதவி செய்து ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து பணம் அனைத்தையும் எடுத்துச் சென்றதாக முதியவர் அளித்த புகாரின் பேரில் மோசடி நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரில் வசிப்பவர் ராஜேந்திரன் (62). இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 10-ம் தேதி மாலை 6.30 மணியளவில் திருவல்லிக்கேணி, துளசிங்கபெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம்முக்குச் சென்று ராஜேந்திரன் பணம் எடுத்துள்ளார்.

அப்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், ராஜேந்திரனிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமல் ராஜேந்திரன் திணறியபோது பணம் எடுத்துக் கொடுக்க உதவியுள்ளார் அந்த நபர். 'தகுந்த நேரத்தில் உதவி செய்தீர்கள் தம்பி' என்று ராஜேந்திரன் அவரிடம் நன்றி கூறிவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

ஆனால், அவருக்கு உதவிய அந்த நபர் ராஜேந்திரனிடம் கார்டை வாங்கி ஏடிஎம் மெஷினில் தேய்த்தார். ஆனால், அதைத் திருப்பித் தராமல், தன்னிடமிருந்த வேறொரு எஸ்பிஐ டம்மி கார்டைக் கொடுத்துள்ளார். பின் நம்பரை ராஜேந்திரன் பதிவு செய்யும்போது அதை நோட்டம்விட்டு பின்னர் அவர் கார்டைப் பயன்படுத்தியுள்ளார். கடந்த நான்கு நாட்களில் ராஜேந்திரன் வங்கிக் கணக்கில் இருந்த பணம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை அந்த நபர் எடுத்துள்ளார்.

தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும் மெசேஜ் வந்தும் அதை ராஜேந்திரன் கவனிக்காததால் அவர் அதுகுறித்து எச்சரிக்கை அடையாமல் விட்டுவிட்டார். நேற்று தனது வங்கிக் கணக்கைச் சோதித்தபோது அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டது தெரிந்து கடந்த 14-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

இது தொடர்பான புகார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமரா உள்ளதால் அந்தக் காட்சிகளையும், மற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x