

பனை தொழிலாளர் வாரியம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பாக ராமநாதபுரம் அரண்மனை அருகே பனை மாநாடு- 2020 நேற்று நடைபெற்றது. அமைப்பின் நிறுவனர் கவிதா காந்தி தலைமை வகித்தார்.
தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன், எம்எல்ஏக்கள் மணிகண்டன், சதன் பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:
பனைமரங்கள் நீர் நிலைகளைப் பாதுகாக்கின்றன. எனவே, அந்த மரங்களை நாம் பாதுகாக்க வேண்டும். பலன் தரும் பனை மரங்களை வெட்டக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
பனை மரத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பனையேறும் இயந்திரக் கருவியை இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பனை தொழிலாளர் வாரியம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பனை மரங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி, ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அரண்மனை வரை நடைபெற்றது.