

ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, கோவையில் 2,100 போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
‘‘கேரளா வழியாக கோவைக்குள் ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவியுள்ளனர். முக்கிய அமைப்புகள், இயக்கங்களின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுஉள்ளனர். எனவே, கோவை, அதன் எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைசாடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் தெரிவிக்கும்படி, ஹோட்டல், விடுதி உரிமையாளர்கள், ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்’’ என உளவுத் துறையின் எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஊடுருவியதாக கூறப்படும் அமைப் பின் பெயரும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து டிஜிபி திரிபாதி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி ஆகியோரது உத்தரவின் பேரில், கோவையில் போலீஸாரின் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போலீஸார் கூறும்போது,‘‘உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து மாநகரில் காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையின் கீழ் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 1,000 பேர் மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இரவு நேரங்களில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் 2 கி.மீ. தொலைவுக்கு ஒரு போலீஸார் இருக்கும் வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’என்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சுஜித்குமார் கூறும்போது,‘‘உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து மாவட்டப் பகுதியில் 1,100 போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 14 சோதனைச் சாவடிகள் உள்ளன. ஒரு சோதனைச் சாவடியில் ஒரு ஷிப்ட்டுக்கு உதவி ஆய்வாளர், 5 போலீஸார் என 6 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
14 சோதனைச் சாவடிகளிலும் 2 ஷிப்ட் அடிப்படையில் 168 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, அவ்வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். தவிர, முக்கிய இடங்களில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
5 கி.மீ. தொலைவுக்கு ஒரு போலீஸார் இருக்கும் வகையில் கண்காணிப்புப் பணி போடப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.