

வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 2 பேர், கோவிட்-19 வைரஸ் அறிகுறிகளுடன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் கடந்த 20 நாட்களுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கோவிட்-19 வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு வார்டில் அனுமதித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
அமெரிக்காவிலிருந்து வந்தவர்
இதேபோல, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 11-ம் தேதி அமெரிக்காவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் இரவு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்படவே அவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
தாய்லாந்து நாட்டவருக்கு..
தாய்லாந்து நாட்டில் இருந்து 7 பேர் அடங்கிய குழுவினர், சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலாவுக்காக தமிழகம் வந்தனர். ஈரோட்டில் நேற்று முன்தினம் சுற்றுலாவில் இருந்தபோது, அவர்களுடன் வந்த (49 வயதான) நபருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஈரோட்டில் இருந்து கார் மூலமாக, கோவை விமான நிலையத்துக்கு அவரை நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தனர். அங்கிருந்து சென்னைக்கு சென்று, பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்தனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்த மருத்துவக் குழுவினர், அந்த நபரை பரிசோதித்தபோது காய்ச்சல் இருப்பதும், சளி தொல்லை இருப்பதும் தெரியவந்தது. கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கத்தாரிலிருந்து வந்த பெண்
கோவையைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், கத்தார் நாட்டுக்குச் சென்றுவிட்டு, விமானம் மூலமாக நேற்று காலை கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை மருத்துவக் குழுவினர் பரிசோதித்தபோது, காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. கோவிட்-19 வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னைக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.