Published : 16 Mar 2020 09:28 AM
Last Updated : 16 Mar 2020 09:28 AM

ரூ.57 கோடி செல்லாத நோட்டுகள் விவகாரம்: டாஸ்மாக் விளக்கத்தை ஏற்க வருமானவரித் துறை மறுப்பு

மத்திய அரசு கடந்த 2016 நவ.8-ம் தேதி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது. அன்றைய தினம் தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் ரூ.84.23 கோடி இருப்பதாகக் கணக்கு காட்டப்பட்டது. அதில், ரூ.81.57கோடி செல்லாத நோட்டுகள். மீதி ரூ.2.66 கோடி செல்லத்தக்கவையாக இருந்தது. இவ்வாறு டிச.30-ம் தேதி வரை மொத்தம் ரூ.140 கோடி செல்லாத நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டன. இதில் இருப்பில் இருந்த ரூ.81.57 கோடி செல்லாதநோட்டுகள் போக மீதமுள்ள ரூ.57.29 கோடிக்கு செல்லாதநோட்டுகள் (பண மதிப்பிழப்பு செய்யப்பட்டவை) வங்கியில் செலுத்தப்பட்டிருந்தது.

பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவ.8-க்குப் பிறகு இந்தப் பணம் டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்யப்பட்டதாக கணக்குகாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கணக்கை ஏற்க வருமானவரித் துறை மறுத்துவிட்டது. இதையடுத்து டாஸ்மாக் நிறுவனம் அளித்த விளக்கத்தில், ‘பணமதிப்புநீக்கம் அறிவிக்கப்பட்டதால் எழுந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகாரணமாக, டாஸ்மாக் கடைகளில் இந்த ரூ.57 கோடி வாங்கப்பட்டுவிட்டது' என தெரிவித்திருந்தது.

ஆனால், இதற்கு எவ்வித ஆதாரத்தையும் வழங்கவில்லை. அரசோ காவல் துறையோ சட்டம் - ஒழுங்கு பாதித்துவிட்டதாகவோ அத்தியாவசியமற்ற பொருளான மதுவை செல்லாத நோட்டு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்றோ எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் இந்த இந்தப் பணத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என வருமானவரித் துறை மறுத்துவிட்டது.

இவ்வாறு கணக்கில் காட்டப்படாத பணம், வருமானவரிச் சட்டம் 69-வது பிரிவின்படி விவரம்தெரிவிக்கப்படாத முதலீடு என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கு வரியோ அல்லது அபராதமோ வசூலிக்கப்படும். அதன்படி, இந்த ரூ.57.29 கோடிக்குஉரிய வரியை செலுத்தும்படி டாஸ்மாக் நிறுவனத்தை வருமானவரித் துறை வலியுறுத்தியுள்ளது. வரி செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

இதற்கிடையே, பணமதிப்பு நீக்கம் அறிவித்த பிறகும் டாஸ்மாக்கில் ரூ.57.29 கோடி அளவுக்கு செல்லாத பணத்தை வாங்கியது ஏன் என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திஉள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x