Published : 16 Mar 2020 09:26 AM
Last Updated : 16 Mar 2020 09:26 AM

கோவிட் -19 வைரஸ் அச்சம் காரணமாக வெளியூர் பயணத்தை தவிர்க்கும் பொதுமக்கள்- பேருந்துகள், ரயில்களில் கூட்டம் குறைவு

தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், விமான நிலையங்களில் கோவிட்-19 வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யும் சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர்.படம்: எம்.வேதன்

சென்னை

கோவிட்-19 வைரஸ் அச்சத்தால் மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். இதனால், பேருந்துகள், ரயில்களில் சுமார் 20 சதவீத கூட்டம் குறைந்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் அச்சத்தால் நாட்டின் பல்வேறு துறைகளின் பணிகளிலும், வர்த்தகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவிட் 19 குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்கள் கூட்டமாக செல்வதையும், தேவையற்ற பயணங்களையும் தவிர்க்க வேண்டுமென மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன. இதனால், மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.

சொந்த வாகனங்கள்

இதேபோல், வேலைக்கு செல்பவர்கள் ரயில், பேருந்துகள் போன்ற பொதுப்போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துவிட்டு, தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தனியார் வாகனங்களின் இயக்கம் அதிகரித்து, அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோவிட் - 19 வைரஸ்அச்சத்தால் நீண்ட தூரம் செல்லும்பயணத்தை மக்கள் சிறிய அளவில் குறைத்துக் கொண்டுள்ளனர். இதனால், அரசு விரைவு பேருந்துகளில் சுமார் 20 சதவீதம் அளவுக்கு பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், மாநகர, நகர பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையவில்லை. ஆனாலும், அரசுபேருந்துகளில் கோவிட்-19 வைரஸ்பரவாமல் தடுக்க தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

இதுதொடர்பாக ரயில் நிலைய ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘‘விரைவு ரயில்களில் வெளியூர் பயணத்தை, மக்கள் கணிசமான அளவுக்கு குறைத்துக் கொண்டு டிக்கெட்களை ரத்து செய்து வருகின்றனர். இதனால், காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளுக்கு இடம் கிடைத்து விடுகிறது.

இருப்பினும், சில விரைவு ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனாலும், ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்கள், ரயில் நிலையங்களில் தூய்மைப்பணிகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x