Published : 16 Mar 2020 09:24 AM
Last Updated : 16 Mar 2020 09:24 AM

கோவிட்-19 பாதிப்பில் இருந்து மக்கள் நலம் பெற வேண்டி திருப்பதியில் 3 நாட்கள் தன்வந்திரி யாகம்: சென்னையில் தேவஸ்தான தலைவர் தகவல்

கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்து நாட்டு மக்கள் நலம் பெற வேண்டி திருப்பதியில் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தன்வந்திரி யாகம் நடத்த உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா ஏப்ரல் 9-ம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று சந்தித்தார். கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு, தலைமையேற்று நடத்திக் கொடுக்குமாறு முதல்வருக்கு அவர் அழைப்பு விடுத்தார். தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சின்காவும் அப்போது உடன் இருந்தார்.

முதல்வரை சந்தித்த பிறகு, ஆர்.கே.சாலையில் உள்ள விடுதியில் செய்தியாளர்களிடம் தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியதாவது:

ஏப்ரல் 9-ம் தேதி நடக்க உள்ளதி.நகர் பத்மாவதி கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் பழனிசாமியை சந்தித்து அழைப்பு விடுத்தோம். சென்னையில் மேலும் ஒரு வெங்கடேஸ்வரா கோயில், மண்டபம், தகவல் மையம் ஆகியவற்றை ஒரே இடத்தில் அமைக்க ஓஎம்ஆர் - ஈசிஆர் இடையே 11 ஏக்கர் நிலத்தை பார்த்துள்ளோம். அதுதொடர்பாகவும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

உளுந்தூர்பேட்டையில் திருப்பதி தேவஸ்தான கோயில் ஒன்றை கட்டுமாறு தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார். இதுபற்றி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் கலந்துபேசி அதன் பிறகு முடிவு எடுக்கப்படும்.

நாடு முழுவதும் கோவிட்-19வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் இருந்து நாட்டு மக்கள் நலம் பெற வேண்டி திருப்பதியில் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 3 நாட்கள் தன்வந்திரி யாகம் நடத்த உள்ளோம்.

வைரஸ் அச்சுறுத்தல் காரண மாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கு மேல் குறைந்துவிட்டது. சராசரி யாக நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பேர் வந்துகொண்டிருந்த நிலை யில், தற்போது 50 ஆயிரம் பேர் மட்டுமே வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக திருப்பதிக்கு வருவோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து ஊழியர்களும் கட்டாயம் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பதி தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் அதை ரத்து செய்துபணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம், அல்லது தேதியை மாற்றிக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x