

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி ஆகியோரின் வாழ்க்கை குறித்த நூல்களையும் ‘தி இந்து' குழுமம் பதிப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்
'தி இந்து' குழும ஆவண காப்பகம் 1878-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் ஆற்றிய உரை ‘தி இந்து' ஆங்கில நாளிதழில் 1894-ம் ஆண்டு வெளிவந்தது. மேலும் அவர் செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு ரயிலில் வரும்போது, ‘தி இந்து' செய்தியாளருக்கு அளித்த பேட்டியும் வெளிவந்துள்ளது.
மேலும், பல்வேறு பிரபலங்கள் சுவாமி விவேகானந்தர் தொடர்பாக எழுதியதும் ‘தி இந்து'வில் வெளிவந்துள்ளது. இவை அனைத்தும் ஆவண காப்பகத்தில் உள்ளன. இவை, ராமகிருஷ்ண மடம் பதிப்பித்துள்ள சுவாமி விவேகானந்தரின் வரலாறு உள்ளிட்டவற்றை சந்தியா ஸ்ரீதர் தொகுத்துள்ளார். அதை ‘தி இந்து' குழுமம் ‘இந்தியாவை உலகுக்கே அடையாளம் காட்டிய துறவி (The Monk who took India to the world)’ என்ற நூலாக பதிப்பித்துள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தா பங்கேற்று நூலை வெளியிட ‘தி இந்து' குழும இயக்குநரும் பதிப்பாளருமான என்.ரவி பெற்றுக்கொண்டார்.
பின்னர் சுவாமி கவுதமானந்தா பேசியதாவது:
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை குறித்த நூல் கடந்த 1933-ம் ஆண்டு வெளிவந்தது. பின்னர் பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக ‘தி இந்து' குழுமம், சென்னையில் இந்த நூலை பதிப்பித்து வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு சிறந்த உலகலாவிய பணியாகும். இதேபோன்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி ஆகியோரின் வாழ்க்கை குறித்த நூல்களையும் ‘தி இந்து' குழுமம் பதிப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தா, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழ் ஆசிரியர் அவர்த்தானந்தா, ‘தி இந்து' குழும தலைமைச் செயல் அதிகாரி எல்.வி.நவநீத், விநியோகப் பிரிவு தலைவர் ஸ்ரீதர் அன்னாலா, சிறப்பு புத்தக பதிப்பு பிரிவுத் தலைவர் ஆர்.ஸ்ரீனிவாசன், பாரதிய வித்யாபவன் இயக்குநர் கே.என்.ராமசாமி, ஒடிசி புத்தக விற்பனை நிலைய இயக்குநர் டி.எஸ்.அஷ்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ராமகிருஷ்ணரின் 185-வது ஜெயந்தி விழாவில் லண்டனில் உள்ள ராமகிருஷ்ண வேதாந்த சென்டர் முன்னாள் தலைவர் சுவாமி தயாத்மானந்தா, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோரின் சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர், வீரமணி ராஜூ குழுவினரின் பக்திப் பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றது.