

கோவிட்-19 வைரஸ் தாக்குதல் காரணமாக சீனப் பொருட்களின் வருகை குறைந்துள்ளது. இதனால் செல்போன், மின்னணு உதிரி பாகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வணிகம் பாதியாக சரிந்துள்ளதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் தோன்றிய கோவிட் 19 வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. உலகபொருளாதாரத்தில் சீனப் பொருட்களின் சந்தை முக்கிய இடத்தை பிடித்திருந்தன. கோவிட்-19 வைரஸ்காரணமாக சீனப் பொருட்கள் ஏற்றுமதி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
செல்போன்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களில் பெரும்பாலானவை சீனாவில் இருந்தே இந்தியாவுக்கு வருகின்றன. விலை குறைவாக கிடைப்பதால் சீனப் பொருட்கள் இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் கலந்துவிட்டன.
இந்நிலையில் கோவிட்-19 வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் இருந்து பொருட்கள் வருவது குறைந்துள்ளது. சீனாவில்உற்பத்தி பாதிப்பு மற்றும் சீனகப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்கு தடை போன்ற பல்வேறு காரணங்களால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சீனப் பொருட்களின் வருகை குறைந்துள்ளது. இது இந்திய சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருட்களின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் கூறினர்.
20% விலை உயர்வு
தூத்துக்குடியில் சீனப் பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஏ.ஹரீஸ் கூறியதாவது: சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்கிறோம். செல்போன் பேட்டரி, சார்ஜர், கவர், புளூ டூத் உபகரணங்கள், பென் டிரைவ்,மெமரி கார்டுகள், எல்இடி விளக்குகள், எமர்ஜென்சி விளக்குகள் போன்ற பொருட்களை டெல்லி, மும்பை, சென்னை போன்ற இடங்களில் இருந்து மொத்தமாக வாங்கி வருவோம்.
கடந்த ஒரு மாதமாக சீனப்பொருட்கள் போதிய அளவில்கிடைப்பதில்லை. 100 பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்தால் 50 பொருட்கள்தான் வருகின்றன. அதுவும் மக்கள் விரும்பிக் கேட்கும் மாடல்கள் வருவதில்லை. அதேநேரத்தில் விலையும் 10 முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, நாங்களும் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரம் 50 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது என்றார்.
நம்பிக்கையோடு உள்ளோம்
தூத்துக்குடியைச் சேர்ந்த மற்றொரு வியாபாரியான கே.பி.கருணாநிதி கூறும்போது, “சீனப் பொருட்களின் வரத்து குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக வியாபாரம் மிகவும் மந்தமாக உள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களின் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. கோவிட்-19 வைரஸ் தாக்கம்குறைந்து விரைவில் சகஜ நிலை திரும்பும் என நம்பிக்கையோடு உள்ளோம்” என்றார்.