Published : 16 Mar 2020 07:50 AM
Last Updated : 16 Mar 2020 07:50 AM

தமிழக பாஜக தலைவருக்கு காத்திருக்கும் சவால்கள்

சென்னை

பாஜக மாநிலத் தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டது தமிழகத்தில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு சவால்களை அவர் எதிர்கொள்ளவேண்டி உள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, கடந்த ஆறரை மாதங்களாக அப்பதவி காலியாகவே இருந்தது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி இருந்தது. பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 10-க்கும்மேற்பட்ட தலைவர்கள் தங்களுக்கு மாநிலத் தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.

பாஜக தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர் சிவ் பிரகாஷ், தேசிய செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ் ஆகியோர் கடந்தஜனவரி 5-ம் தேதி சென்னையில் மாநில நிர்வாகிகள், துணை அமைப்புகளின் மாநில நிர்வாகிகளிடம் மாநிலத் தலைவர் தொடர்பாக கருத்துகளை கேட்டனர். அப்போது ஒருவர்கூட எல்.முருகன் பெயரைச் சொல்லவில்லை. மாநிலத் தலைவருக்கான போட்டியில் 20-க்கும் அதிகமானோரின் பெயர்கள் அடிபட்டன. அதிலும் எல்.முருகன் பெயர் இல்லை. ஆனாலும் அவர் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிராம ணர்களின் ஆதிக்கம் நிறைந்த கட்சியாக விமர்சிக்கப்படும் பாஜகவில் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த எல்.முருகனுக்கு சிறப்பாக செயல்பட்டு, அந்த விமர்சனத்தை தகர்க்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.

திராவிட கட்சிகள் கோலோச்சும் தமிழகத்தில் எத்தனை முயற்சி செய்தும் பாஜகவால் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. 1996-ல் கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபுரம் தொகுதியில் தனித்து வென்று சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்த பாஜக, 2001-ல் திமுக கூட்டணியில் 4 எம்எல்ஏக்களைப் பெற்றது. 1998-ல் அதிமுக கூட்டணியில் 3 எம்.பி.க்கள், 1999 திமுக கூட்டணியில் 4 எம்.பி.க்கள், 2014-ல்தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் அமைத்த கூட்டணியில் 1 எம்.பியை பாஜக பெற்றது. மற்றபடி 3 சதவீத வாக்கு வங்கியைத் தாண்ட அக்கட்சியால் முடியவில்லை.

இந்நிலையில் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முருகனுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1999-ல் தலித் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.பி.கிருபாநிதி பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அரசியல் அனுபவம் இல்லாத அவரால் கட்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட முடியவில்லை. அப்போது மாநில அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த இல.கணேசனுக்கும், அவருக்குமான மோதல் வெளிப்படையாகவே பேசப்பட்டது. கடைசியில் கிருபாநிதி திமுகவில் இணைந்தார்.

இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘‘கிருபாநிதிக்கு இருந்த சிக்கல்கள் முருகனுக்கு இல்லை. கிருபாநிதி அரசியல்வாதி அல்ல. ஆனால், பள்ளிக்காலம் முதலே அரசியல் ஆர்வம் கொண்டவர் முருகன். படிப்படியாக தன்னை அரசியலில் கட்டமைத்துக் கொண்டவர். கிருபாநிதிக்கு பாஜக தேசிய தலைவர்களுடன் நெருக்கமோ, நேரடித் தொடர்போ இல்லை. ஆனால், தற்போதைய குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த் பாஜக தேசிய எஸ்.சி. அணித் தலைவராக இருந்தபோது, மாநில எஸ்.சி. அணித் தலைவராக இருந்தவர் முருகன். இருவரும் வழக்கறிஞர்கள் என்பதால் அவர்களுக்குள் நெருங்கிய நட்பு உருவானது.

பாஜக எஸ்.சி. அணி தேசியசெயலாளராக இருந்தபோது கட்சியின் மேலிடத் தலைவர்களுடனான தொடர்பை மேலும் வலுவாக்கிக் கொண்டார். தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தததால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் நேரடித் தொடர்பும் ஏற்பட்டது. இதனால் முருகனின் பணி கடினமாக இருக்காது’’ என்றனர்.

பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளராக இருக்கும் கேசவ விநாயகம், திருச்சி கோட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பாளராக இருந்த காலம் முதலே முருகனை அறிந்தவர். அவரின் அரசியல் வளர்சிக்கும் காரணமானவர் என்றுபாஜகவில் பலரும் கூறுகின்றனர்.

ஆனால், தமிழக பாஜகவில் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் என்று பல்வேறு கோஷ்டிகள் உள்ளன. இவர்களை சமாளிப்பதுதான் முருகனுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்என்கின்றனர். பாஜக மாவட்டத்தலைவர்கள் அனைவரும் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முருகனுக்கு எந்தஅளவுக்கு ஒத்துழைப்பார்கள் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முருகன் தனது முதல் பணியாக மாநில துணைத் தலைவர், பொதுச்செயலாளர், செயலாளர், பொருளாளர் என்று மாநில நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். அவர்களைக் கொண்டுதான் அவர் கட்சிப் பணியாற்ற வேண்டியிருக்கும். மூத்த தலைவர்களை சமாளிக்க வேண்டியிருக்கும். 42 வயதில் மாநிலத் தலைவராகியிருக்கும் முருகனுக்கு சாதகமான அம்சங்கள் பல இருந்தாலும் சவால்களே அதிகம் காத்திருக்கின்றன. இவற்றை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x