

அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என பெங்களூரு காவல் துறை முன்னாள் துணை ஆணையர் கு.அண்ணாமலை தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் சூ.தொட்டம்பட்டியைச் சேர்ந்தவர் கு.அண்ணாமலை. பெங்களூரு காவல் துறைதுணை ஆணையராகப் பணியாற்றிய இவர், மக்கள் பணி செய்வதற்காக கடந்தாண்டு தன் பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் பணியாற்றுவதற்காக ‘வி தி லீடர்ஸ்’ (We the Leaders) என்ற அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். இதன் தொடக்க விழா கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
அறக்கட்டளையை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்து கு.அண்ணாமலை பேசியதாவது:
கடந்த ஒன்பதரை ஆண்டு காலகாவல்துறை பணியில் பல விஷயங்களைப் பார்த்துவிட்டேன். இன்னும் 25 ஆண்டு காலம் பணியாற்றுவதைவிட, ‘சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றத்தில் ஒரு சிறு தூணாக நாம் இருக்க வேண்டும்’ என்பதற்காகவே பதவியைத் துறந்தேன்.
சமுதாயத்தில் மாற்றம் ஏற்படவேண்டும். அரசியல் கெட்டுப்போய் உள்ளது. நல்லவர், நல்லபாதையைக் காட்டும் தலைவர் இல்லை. தொண்டர்கள் வேண்டாம், அனைவரும் தலைவராக வேண்டும் என்பதற்காக இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.
வேலை தேடுவதைவிட, சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்துவது. ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி அளிப்பது. திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிப்பது.
வாழ்க்கை மற்றும் உணவுமுறையை மாற்றி அமைப்பது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதுடன், அதற்கான சந்தையை அமைப்பது போன்றவை இந்த அறக்கட்டளையின் நோக்கங்கள் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியது: கரூரில்தொடங்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளைக்கு தனியே இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தன்னார்வலர்களை சேர்க்கும் பணி ஒரு மாதம் நடைபெறும். ஏப்.14-ம் தன்னார்வலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, ஓராண்டுக்கான செயல்திட்டம் வெளியிடப்படும். இந்த அமைப்பில் யாரும்தலைவர் கிடையாது. ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே உள்ளனர். அனைவரும் தலைவர்களாக மாறவேண்டும். தமிழகஅரசியல் 1960- 1970 காலகட்டத்திலேயே உள்ளது. அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.