

நாகர்கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை அகற்றப்பட்டது. இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் வடசேரி பரதர் தெருவில் மார்பளவு எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இச்சிலை அருகே நேற்று முன்தினம் இரவு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை வைக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் நேற்று அங்கு சென்று விசாரணை நடத்தினார். உரிய அனுமதி பெறாததால், சிலையை அகற்ற வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர்.
அதிமுகவினர் வாக்குவாதம்
இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். `ஏற்கெனவே, எம்.ஜி.ஆர். சிலை இருப்பதால், அதன் அருகே ஜெயலலிதா சிலை வைக்க தனியாக அனுமதி வாங்கத் தேவையில்லை’ என அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர்.
வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் நாகேஷ்வரகாந்த் ஆகியோர், `அனுமதியின்றி சிலை வைக்கக் கூடாது’ எனக்கூறி, சிலையை துணியால் மூடினர்.
அனுமதி பெற்று வைக்கலாம்
இதைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோகன் அங்கு வந்து, ஜெயலலிதா சிலையை மூடிவைத்திருந்த துணியை அகற்றி, சிலைக்கு மாலை அணிவித்தார்.
நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர், அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
`அனுமதி பெற்று சிலையை வைத்துக்கொள்ளலாம்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் ஜெயலலிதா சிலை அகற்றப்பட்டது.