நடிகர் ரஜினிகாந்துக்கு பதில் தர தேவை இல்லை- மதுரையில் முதல்வர் கருத்து

நடிகர் ரஜினிகாந்துக்கு பதில் தர தேவை இல்லை- மதுரையில் முதல்வர் கருத்து
Updated on
1 min read

நடிகர் ரஜினி கட்சியே ஆரம்பிக்காத நிலையில், கற்பனையான எந்த பதிலும் கூறத் தேவை இல்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படவில்லை. விடுமுறை குறித்த அறிவிப்பு நாளை (இன்று) வெளியிடப்படும். குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக இல்லை.

நடிகர் ரஜினி கட்சியே ஆரம்பிக்காத நிலையில், கற்பனையான எந்த பதிலும் கூறத் தேவை இல்லை. நடிகர் கமல்ஹாசனின் சக்தியை கடந்த தேர்தலில் பார்த்துவிட்டோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். மக்களை சந்திக்கலாம்.

தொண்டர்கள் எங்கள் பக்கம் வருவார்கள் என 3 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதைத்தான் தற்போதும் தினகரன் தெரிவித்து வருகிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமமுக இருக்குமா, இருக்காதா என்பதை மக்கள்தான் முடிவு செய்வர். சிறுபான்மை மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக சட்டப்பேரவையில் நானும், வருவாய்த் துறை அமைச்சரும் நேற்று தெளிவாக விளக்கம் அளித்துவிட்டோம். இவ்வாறு முதல்வர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in