கருணாநிதி, அன்பழகன் வழியில் தமிழ் இன உணர்வு, மொழிப்பற்றுடன் திராவிட கொள்கைகளை பின்பற்ற வேண்டும்: படத்திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் க.அன்பழகனின் உருவப் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். துரைமுருகன், கி.வீரமணி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கே.எஸ்.அழகிரி,திருமாவளவன், பாரிவேந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். படம்: ம.பிரபு
மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் க.அன்பழகனின் உருவப் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். துரைமுருகன், கி.வீரமணி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கே.எஸ்.அழகிரி,திருமாவளவன், பாரிவேந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். படம்: ம.பிரபு
Updated on
1 min read

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரது வழியில் தமிழ் இன உணர்வு, மொழிப்பற்று, திராவிட இயக்க கொள்கைகளை பின்பற்றி வாழ வேண்டும் என அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சிமற்றும் புகழஞ்சலி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். திமுக பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். அன்பழகனின் படத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் அரசியல் கட்சித் தலைவர்களும் அன்பழகனின் குடும்பத்தினரும் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், பேராசிரியர் க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்று பேராசிரியர் க.அன்பழகனுக்கு புகழாரம் சூட்டிப் பேசினர்.

மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘நாங்கள் சோகத்தோடும் கனத்தஇதயத்தோடும் இருக்கிறோம். எனது தந்தை கருணாநிதியை இழந்தபோது எந்த மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் தற்போதும் உள்ளேன். 98 வயதான பெரியப்பா க.அன்பழகனுடன் கடந்த 50 ஆண்டுகளாக நெருங்கிப் பழகியுள்ளேன். திமுகவில் கடந்த 43 ஆண்டுகளாக பொதுச்செயலாளராகவும் கருணாநிதிக்கு உற்ற துணையாகவும் இருந்தவர். அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. அவர்தொடர்ந்து எங்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்து வந்தார். எனது தந்தை கருணாநிதி மறைந்தபோது அன்பழகன் இருக்கிறாரே என நம்பிக்கையுடன் இருந்தோம். பெரியப்பா எப்படியாவது 100 வயதைக்கடந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தோம். எதிர்பாராதவிதமாக அவர் மறைந்துவிட்டார். கருணாநிதி, அன்பழகன் ஆகியோரது வழியில் தமிழ் இனம், மொழிப்பற்று, திராவிடக் கொள்கைக்காக தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் இந்து என்.ராம், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. மற்றும் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in