

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகளைக் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
கோடியக்கரையில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் புள்ளி மான், வெளி மான், நரி,முயல், காட்டுப்பன்றி, குரங்கு, குதிரை போன்ற பல்வேறு விலங்குகள் உள்ளன. இந்தச் சரணாலயத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுவது வழக்கம்.
தஞ்சாவூர் மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், நாகை மாவட்ட அலுவலர் கலாநிதி ஆகியோர் உத்தரவின்பேரில் வனவிலங்குகளைக் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
வன உயிரின ஆர்வலர்கள்
இந்தப் பணியில் பல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளையின் விஞ்ஞானி ஏ.குமரகுரு, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான்ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 28 மாணவ, மாணவிகள், வனத் துறையைச் சேர்ந்த 40 பேர் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் என 65-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர் களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. கணக்கெடுப்புப் பணி இன்றும் நடைபெறவுள்ளது.