Last Updated : 20 Aug, 2015 04:56 PM

 

Published : 20 Aug 2015 04:56 PM
Last Updated : 20 Aug 2015 04:56 PM

நீர் சேமிப்பை அதிகப்படுத்த ஏரிகளில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்: ஈரோடு விவசாயிகள் எதிர்பார்ப்பு

நீர் ஆதாரங்களில் தண்ணீர் இருப்பை அதிகப்படுத்த ஏரி மற்றும் குளங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பவானி, கோபி, சத்தியமங்கலம் பகுதிகளில் குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், வரட்டுப்பள்ளம், சஞ்சீவிராயன் குளம், தண்ணீர் பந்தல், புளியம் பட்டி, கொளப்பலூர், ஓடத்துறை ஏரிகள், அந்தியூர் பெரிய ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் பெரிய ஏரி உள்ளிட்ட 22 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இவை அனைத்தும் 100 முதல் 600 ஏக்கரில் உள்ளது. இந்த ஏரிகள் தூர் வாரி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால், மழை காலங்களில் நீர் சேமிப்பு குறைந்து வருகிறது.

அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், குளம் மற்றும் ஏரிகளை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

வண்டல் மண்

இப்பணிகளை பொதுப்பணித் துறையினர் செய்தால் செலவு அதிகம் ஆகும் என்பதால், குளம் மற்றும் ஏரிகளில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதன் மூலம் குளம் ஆழப்படுத்தப்படுவதோடு, விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் உரமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாவட்டம் முழுவதும் கிராவல் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு மண் கிடைக்காமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிராவல் மண் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபி தளபதி கூறியதாவது:

மழை நீர் வீணாவதை தடுக்க ஏரி, குளங்களை ஆழப்படுத்தி அதில் சேமிக்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு நீர் ஆதாரங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதித்தால், நீர் ஆதாரங்கள் தூர் வாரப்பட்ட நிலை ஏற்படும். பவானிசாகர் அணையில் பணம் செலுத்தி மண் எடுக்கும் நடைமுறை உள்ளதுபோல் மற்ற இடங்களிலும் இதை பின்பற்றலாம்.

பெருகும் நீர் ஆதாரம்

ஏரி, குளங்களில் இருந்து பணம் செலுத்தி, பொதுமக்கள் கிராவல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு அனுமதி அளித்தால், மழைநீர் அதிக அளவில் தேக்கப்பட்டு, நீர் ஆதாரம் பெருகும். மண்ணுக்காக வசூலிக்கப்படும் தொகையை கொண்டு ஏரி, குளங்களை சீர் செய்யவும் முடியும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பணிக்கும் பயன்படுத்தலாம்

சமீபத்தில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை கால்வாயில் கன்கிரீட் போடும் பணி நடந்தது. இதன் தொடர்ச்சியாக கரை களை பலப்படுத்த தனியாரிடம் இருந்து பொதுப்பணித்துறை மண் வாங்கியுள்ளது. இதற்காக ரூ.30 லட்சம் செலவு செய்துள்ள தாக கூறப்படுகிறது.

தனியாரிடம் இருந்து மண் வாங்குவதற்கு பதிலாக, ஏரி, குளங்களில் இருந்து பொதுப் பணித்துறை மண் எடுத்திருந் தால் இந்த செலவு மிச்சமாகி இருப்பதோடு, நீர் தேக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x