Published : 14 Mar 2020 07:41 PM
Last Updated : 14 Mar 2020 07:41 PM

தூத்துக்குடி அருகே உழக்குடியில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு: ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள கலியாவூர் பஞ்சாயத்து உழக்குடியில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு அகழாய்வுப் பணிகளை மார்ச் 22-ம் தேதி அமைச்சர் மா.பாண்டியராஜன் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கலியாவூர் உழக்குடியில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு பாறை ஓவியங்கள் உள்ளன.

உழக்குடி மற்றும் கலியாவூர் கிராமத்தில் தூத்துக்குடி ராஜலெட்சுமி கல்லூரியின் வரலாற்று துறை மாணவர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

கள ஆய்வில் கல்லூரி பேராசிரியர்களான பி.பேச்சிமுத்து பி.பியூலா தேவி ஸ்டெல்லா எம்.சண்முகலெட்சுமி, மாலையா கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். உழக்குடி பகுதியில் உள்ள உழக்குடிகுளம் அருகே முதுமக்கள் தாழியை பார்வையிட்டனர்.

பின்பு அங்குள்ள சுடலை மாடன் சாமி அருகே பாறை ஓவியத்தையும் பார்வையிட்டனர். அதன்பின்பு கலியாவூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் நடந்த “எதிர்காலத் தொல்லியல் களங்கள் - உழக்குடி மற்றும் கலியாவூர்” என்ற தலைப்பில் விளக்கவுரை வழங்கப்பட்டது.

இதில், தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பட்டய ஆய்வு மாணவரான மா.ஆறுமுக மாசான சுடலை, உழக்குடி மற்றும் கலியாவூரில் தன்னுடைய கள ஆய்வில் கிடைத்த கருப்பு சிவப்பு, உள்புறம்

கருப்பு வெளிப்புறம் சிவப்பு, கீறல் குறியீடு, பளபளப்பான கருப்பு ஆகிய பானை ஓடுகளும் பரிமனை, பழங்கால கல்கருவிகள், வட்டச் சில்லுகள், தண்ணீர் வடிகட்டி ஆகிய பொருட்களைப் பற்றியும், தாமிரபரணி நாகரிகமே மிகவும் பழமையானது, என்றார்.

தொடர்ந்து இன்று, ஆய்வு மாணவர் ஆறுமுக மாசான சுடலை, தொல் பொருள் ஆராய்ச்சியாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் உழக்குடி பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் ஆறுமுக மாசான சுடலை கூறும்போது, உழக்குடி கலியாவூரில் செல்லும் சாலையோரமாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடை அமைக்க பள்ளம் தோண்டினர். அப்போது பல வகையான மண்பாண்டங்கள் உடைந்த நிலையில் வெளிப்பட்டன. மேலும் தற்போது அந்த விடத்தில் மழை நீர் கேசரிப்பு தடுப்பணை கட்டுவதற்கு பள்ளம் தோண்டிய போது பல தொன்மையான பொருட்கள் புதைந்து கிடந்தது தெரியவந்தது.

அந்த பொருட்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகும். கருப்பு சிவப்பு நிற மண்பாண்டம், பளபளப்பான கருப்பு நிற மண்பாண்டம், உள்புறம் கருப்பு வெளிப்புறம் சிவப்பு நிற மண்பாண்டம், மண்ணாலான நீர் வடிகட்டி, விளையாட்டுப் பொருள்கள், பானைக்குள் கீழ் வைக்கப் பயன்படுத்திய பொருள்கள் கிடைத்துள்ளன.

தற்போது உழக்குடி குளத்து அருகே மிகப்பெரிய முதுமக்கள் தாழி உள்ளது. இந்த தாழிகளை முறைப்படி மாநில தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும், என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x