

தூத்துக்குடி வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் பாலத்தில் மீண்டும் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் 2 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாலங்கள் அமைக்கப்படும்போதே தரமானதாக இல்லை என மக்கள் புகார் கூறி வந்தனர்.
இதற்கிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரும் சாலையில் உள்ள பாலத்தில் பள்ளம் விழுந்தது. இதனால் நான்குவழிச்சாலையில் போக்குவரத்து ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டது.
சுமார் ஓராண்டுக்கு பின்னர் பாலத்தில் விழுந்த பள்ளம் சரி செய்யப்பட்டு, போக்குவரத்து நடந்து வந்தது. ஆனாலும் பாலம் முறையாக சீரமைக்கபப்படவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. தகவல் அறிந்து நெடுஞ்சாலை துறையினர் இந்த வழியாக செல்லும் பேருந்துகளை நிறுத்தி, ஒரு வழிச்சாலையாக மாற்றி அமைத்தனர்.
எனவே, நான்குவழிச்சாலையில் உள்ள வல்லநாடு ஆற்றுப்பாலத்தை முழுமையாக ஆராய்ந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கலியாவூர் பஞ்சாயத்து துணை தலைவர் பரமசிவன் கூறும்போது, ”நான்குவழிச்சாலை பணிகளில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலங்கள் கட்டும்போதே தரமானதாக இல்லை என புகார் கூறினோம்.
இதனை மெய்பிக்கும் வகையில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பாலத்தில் பள்ளம் ஏற்பட்டது. அதனையும் முறையாக சரி செய்யாமல் கடமையே என வேலை நடந்தது. தற்போது பாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த பாலத்தின் தரத்தை ஆராய்ந்து, முழுமையாக சீரமைக்க வேண்டும். அதுவரை 50 ஆண்டுக்கு முன்னால் கட்டப்பட்ட பழைய பாலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டும்” என்றார் அவர்.