ரஜினி பற்றி பேச எனது வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்துங்கள்: செய்தியாளர்களிடம் சரத்குமார் கிண்டல்

ரஜினி பற்றி பேச எனது வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்துங்கள்: செய்தியாளர்களிடம் சரத்குமார் கிண்டல்
Updated on
1 min read

'ரஜினிகாந்த் குறித்து பேச வேண்டும் என்றால் எனது வங்கிக் கணக்கில் ரூ 5 லட்சம் போடுங்கள்' என செய்தியாளர்களிடம் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று (சனிக்கிழமை) ராமநாதபுரத்தில் தனது கட்சிப் பிரமுகர் ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சரத்குமார், "ரஜினிகாந்த் கருத்துகளுக்கு நான் பதில் கூற விரும்பபில்லை. ரஜினிகாந்த் பற்றி பேசினால் தொலைக்காட்சி மற்றும் செய்தி நிறுவனங்களின் டிஆர்பி எகிறும் என்பதாலேயே இதைப்பற்றி கேட்கிறார்கள்.

எனவே ரஜினிகாந்த் பற்றி பேச வேண்டுமானால் என்னுடைய வங்கிக் கணக்கில் 5 லட்சம் ரூபாய் செலுத்துஙகள். அதன்பிறகு ரஜினிகாந்த் பற்றி கூறுகின்றேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பல்வேறு இன்னல்களைக் கடந்து இயக்கத்தையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி திறம்பட ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார். எனவே தமிழக அரசியலில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

குடியுரிமை சட்டம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட ஒன்று. இந்த சட்டத்தில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இஸ்லாமியப் பிரதிநிதிகள் ஒரு குழு அமைத்தால் நானே முதல்வர் மற்றும் பிரதமரிடம் அவர்களை அழைத்துச் சென்று சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

கோவிட்-19 பாதிப்பை தவிர்ப்பதற்கு பொதுமக்களாகிய நாம் முன் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். தங்களையும், தங்கள் வீடுகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்,

அதிகம் கூட்டம் உள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.

எஸ். முஹம்மது ராஃபி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in