

திருப்பதிக்கு நிகராக பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் ரூ.325 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினர்.
இவ்விழாவில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, " திண்டுக்கலில் கட்டப்படும் புதிய அரசு மருத்துவக்கல்லூரி வரும் 2020-21ம் கல்வியாண்டு முதல், செயல்படத் தொடங்கும்.
தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்மாதிரியான மாநிலமாக உள்ளது.
தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் கொரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ரூ.2,850 கோடி மதிப்பில் சுகாதார திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக கை மாற்று அறுவை சிகிச்சையை நடத்தியது தமிழக அரசு.
குடிமராமத்து திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஆனால், அதில்கூட ஸ்டாலின் குறை கண்டுபிடிக்கிறார். இது விவசாயிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டம். ஸ்டாலின் எத்தனை பெரிய பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அதிமுக அரசு மீது குறை காண முடியாது.
முதல்வரின் சிறப்பு குறை தீர் திட்டம் மூலம் அதிகாரிகளே கிராமங்கள் வரை சென்று நடவடிக்கை எடுக்கின்றனர். தமிழகம் முழுவதும் ஏழை முதியோர்க்கும் ஓய்வூதியம் கொடுத்து வருகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டித் தருவதாக இருக்கட்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டமாக இருக்கட்டும் தமிழகம் இந்தியாவுக்கு முன்னோடி.
அதிமுகவில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கூடியிருக்கிறது. கல்வி இடைநிற்றல் குறைந்திருக்கிறது. தொழில் வளம் பெருகியுள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக தொழில் வளம் உள்ளது. விவசாயத்திலும் பல்வேறு சாதனைகளை அரசு செய்துவருகிறது.
காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதிமுக அரசு மக்கள் நலன் அரசு என்பதை நிரூபித்துள்ளது.
அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
சிறுபான்மையினரை அரசுக்கு எதிராகத் திருப்பி அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயன்றுவருகின்றன. குழப்பநிலை ஏற்படுத்த சட்டம் ஒழுங்கை சீரழிக்க முயல்கின்றனர். ஆனால், மக்கள் அதிமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
சிறுபான்மையினருக்கு ஏதாவது சிறு தீங்கு நடந்தாலும் அதை தடுக்கின்ற அரசாக அதிமுக அரசு இருக்கும். சிறுபான்மையின மக்கள் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதை தடுத்து நிறுத்தும் சக்தியாகவே அதிமுக இருக்கும்.
திருப்பதிக்கு நிகராக பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அனைத்து வசதிகளும் செய்துதரப்படும். ஏற்கெனவே ரூ.58 கோடி செலவில் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன" என்றார்.
முன்னதாக, விவசாயிகள், அவருக்கு ஏர் கலப்பையை வழங்கினார்.மகிழ்ச்சியுடன் ஏர் கலப்பையை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், விவசாயிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
விழா முடிவில், ஏராளமான பயனாளிகளுக்கு 64 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
முன்னதாக பேசிய, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்தியாவிலேயே, ஒரே அரசாணையில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்த அரசு தமிழக அரசுதான் என்று பெருமிதம் தெரிவித்தார்.