

நடிகர் ரஜினிகாந்த் தன் பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து பேசியிருப்பதாக மக்களவை திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களிடையே எழுச்சி ஏற்படும்போது, தான் அரசியலுக்கு வருவதாக, சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, தயாநிதிமாறன் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சென்னை, யானைகவுனியில் இன்று (மார்ச் 14) திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை மக்களவை திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.
"ரஜினி ஆராய்ந்துதான் பேசியிருக்கிறார். தன் பலம் எது பலவீனம் எது என்று ஆராய்ந்து, நன்கு படித்து முடிவெடுத்துள்ளார். அவரின் முடிவை வரவேற்கிறோம். வரவில்லை என்று சொன்னவரை விட்டுவிடுங்கள். வராதவரை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? வரவில்லை என்று சொன்னால் பரவாயில்லை. ரஜினி எங்கிருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துகள்" என தயாநிதி மாறன் தெரிவித்தார்.