சோனியா, மன்மோகன் சிங் சிந்தனைக்கு நிகரான சிந்தனையுடன் ரஜினி பேசியுள்ளார்: மாணிக்கம் தாகூர்

சோனியா, மன்மோகன் சிங் சிந்தனைக்கு நிகரான சிந்தனையுடன் ரஜினி பேசியுள்ளார்: மாணிக்கம் தாகூர்
Updated on
1 min read

ஆட்சி அதிகாரமும் கட்சித் தலைமையும் வெவ்வேறு நபர்களுக்கு என்ற ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது என விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. மாணிக்கம் தாகூர், "ஆட்சித் தலைமையில் உள்ளவர்கள் அறிஞர்களும் நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும். கட்சித் தலைமைக்கு அரசியல் அதிகாரங்களுக்கு ஆசைப்படாதவர்கள் வர வேண்டும் என்ற ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது.

இதைத்தான் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் செய்தனர். 10 ஆண்டுகாலம் இந்த வழியில் மத்தியில் சிறப்பான ஆட்சி வழங்கப்பட்டது. சோனியா காந்தி, மன்மோகன் சிங்கின் சிந்தனைக்கு நிகரான சிந்தனையுடன் ரஜினி பேசியுள்ளார்.

எங்களைப் பொருத்தவரை தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டிய அரசு. இந்த அரசு கமிஷன் கரப்ஷனில் திளைக்கும் அரசு. இந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள். அதை அமைச்சரே செய்கிறார். ஆனால் அவர் மகிழ்ச்சியுடன் சுற்றிவருகிறார். அமைச்சரைக் கூப்பிட்டு கண்டிக்கக்கூட வக்கில்லாதவராக முதல்வர் இருக்கிறார்" என்று பேசினார்.

நாடாளுமன்றத்தில் அமித் ஷா ஆட்சி..

தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் ஆட்சி நடக்கிறது. அவர் குஜராத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கியதுபோன்ற செயலை இங்கும் செய்ய நினைக்கிறார். ஆனால் அதை இந்திய ஜனநாயகம் ஏற்றுக்கொள்வது. டெல்லி வன்முறையில் அவர் தான் பொறுப்பு, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நாங்கள் பதிவு செய்துள்ளோம். எத்தனை பேரை வெளியாற்றினாலும் இறுதி நபர் வரை இதையே எடுத்துரைத்துள்ளோம்.

தமிழகம் சுகாதாரத்துறையில் உயர்ந்த மாநிலமாக பல ஆண்டுகளாகத் திகழ்கிறது. அதன் பிரதிபலிப்புதான் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது. குலாம் நபி ஆசாத் எம்.சி.ஐ. விதிமுறைகளில் மேற்கொண்ட திருத்தம் முக்கியமானது.

புதிய மருத்துவக் கல்லூரிகள் வருவது வரவேற்கத்தக்கது. ஆனால், நீட்டைப் பொருத்தவரை இந்த அரசு முதுகு எலும்பு இல்லாத அரசு என்பதை நிரூபித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்குவந்து ராகுல் பிரதமராகும்போது தமிழகத்துக்கு நீட்டில் இருந்து விலக்கு கிடைக்கும். நீட்டில் இருப்பதா வேண்டாமா என்ற முடிவை மாநில அரசுகளே எடுக்கும் அதிகாரம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in