

ரஜினி தேர்தல் நடப்பதற்கு 8 மாதங்களுக்கு முன் கட்சி தொடங்குவார். கமலும் டிடிவி தினகரனும் ரஜினியுடன் இணைவார்கள். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி இருக்கும் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, ''நான் முதல்வராக வரப்போவதில்லை. அரசியலில் ஒரு எழுச்சி வர வேண்டும். மிகப்பெரிய இரண்டு கட்சிகளுக்கு இடையே என் ரசிகர்களைப் பணம் செலவு செய்ய வைத்து பலி கொடுக்க விரும்பவில்லை.
10 சதவீதம், 15 சதவீதம் என வாக்குகளைப் பிரிக்கும் அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை. நான் அரசியலுக்கு வருவதற்கு மக்கள் எழுச்சி ஏற்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தோம்.
என்னதான் சொல்ல வருகிறார் ரஜினி?
ரஜினிக்கும் ஸ்டாலினுக்குமான அரசியல் இது. கட்சி ஆரம்பிப்பதை 4 மாதங்கள் தள்ளிப்போடுகிறார் ரஜினி.
ஆனால் ரஜினி அப்படிச் சொல்லவில்லையே?
கட்சி ஆரம்பித்தால் தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்புதான் ஆரம்பிப்பார்.
ஆனால் அவர் பேசுவதைப் பார்த்தால் கட்சி ஆரம்பிப்பதுபோல் இல்லையே?
தேர்தல் நெருக்கத்தில் ஆரம்பிக்கவில்லை என்றால் ஆரம்பிக்கவில்லை வைத்துக்கொள்ளுங்கள்.
அப்படியானால் என்னதான் நிலைப்பாடு?
தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன் ரஜினி கட்சி தொடங்குவார். ரஜினியை மையப்படுத்தி தேர்தல் இருக்கும். இதுதான் என் கருத்து நான் முன்னர் சொன்னதுதான் இப்போது நடக்கிறது.
ரஜினி வேறொருவரை முதல்வராக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு குறைவு என்று நீங்கள் சொன்னீர்களே?
பலவீனமான ஒன்றுதான். அதில் மாற்றம் இல்லை. ரஜினி முதல்வர் வேட்பாளராக நிற்பதுதான் பலம். இன்னொருவரைக் காட்டுவதை விட தலைவரே நிற்பதுதான் நல்லது. ஒருவர் தனது பலனை இன்னொருவருக்குக் கொடுக்க விரும்ப மாட்டார். ரஜினி, தான் முதல்வராக நிற்கவில்லை என்கிறார். ஆனால் ஸ்டாலினுக்கு எதிராக ஒரு அணி அமைப்பதன் வேலையைப் பார்ப்பார்.
ஸ்டாலினை வீழ்த்தும் இன்னொரு அணி என்கிற முறையில் ரஜினி தலைமையில் ஸ்டாலினை வீழ்த்தும் அணி அமையும். அதில் கமல்ஹாசன் போன்றோர் இருப்பார்கள்.
அப்படியானால் ரஜினி சொல்லும் நேர்மை அரசியலில் இந்தக் கூட்டணிக்குள் வரும் அரசியல் கட்சிகள் உள்ளதா?
அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. நான் ரஜினியின் ஸ்போக்ஸ் பர்சன் அல்ல. நான் சில கணிப்புகளைச் சொல்கிறேன். அது வருகிறது.
ரஜினி கூட்டணி அரசியலுக்கு வரமாட்டார் என்று எடுத்துக்கொள்ளலாமா?
நான் அதைச் சொல்ல முடியாது. 8 மாதங்களுக்கு முன் அரசியலுக்கு வருவார் என்று சொன்னேன். அது நடக்கும்.
அப்படியானால் அதைச் சொல்லிவிடலாமே?
அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். நான் சொல்ல முடியாது.
அவர் கூட்டணியுடன் வருவாரா? தனித்து வருவாரா?
ரஜினி வர்சஸ் ஸ்டாலின் அரசியல் தேர்தல் நெருக்கத்தில் வரும். கமல், டிடிவி தினகரன் ஆகியோர் ரஜினி தலைமையிலான கூட்டணிக்குள் வருவார்கள். ரஜினியைப் பெரிய சக்தியாக கமலும், தினகரனும் ஏற்றுக்கொள்வார்கள். ரஜினியை மையப்படுத்தும் அரசியலை ஏற்றுக்கொண்டால் அன்புமணியும் அதில் இணைவார். மற்றவர்கள் குறித்து நான் இப்போது எதுவும் சொல்ல முடியாது.
இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி தெரிவித்தார்.