

அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் தேமுதிக சார்பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர் விஜயகாந்த் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
நடிகர் சிவாஜிக்கு மணிமண் டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வாக்குகளுக்காகவே இதை அவர் அறிவித்துள்ளார். அடுத்தும் அதிமுகவே ஆட்சிக்கு வரும் என அக்கட்சியினர் நினைக்கின்றனர். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர நான் விடமாட்டேன்.
மது எதிர்ப்புப் போராளி சசிபெருமாள் சாவில் மர்மம் உள்ளது. எனவே, சிபிஐ விசாரணை தேவை. விவசாய பாதிப்பால் யாரும் சாகவில்லை என அமைச்சர் கூறுகிறார். இதுகுறித்து அவரது மனசாட்சிக்கே தெரியும்.
டிஎன்பிஎல் ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் 28 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். அவர் களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பிரேமலதா பேசிய தாவது: கரூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியிலும் மணல் கொள்ளை நடந்தது. அதிமுக ஆட்சியிலும் மணல் கொள்ளை நடக்கிறது. தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதைவிட, அடுத்த தேர்தலை பற்றி மட்டுமே அதிமுக சிந்திக் கிறது. மக்களுக்கு என்ன தேவை என்பதை மட்டுமே தேமுதிக சிந்திக்கிறது என்றார்.
கதறுது கல்லீரல்…
கூட்டத்தில், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விஜய காந்த் பேசும்போது, “மது அருந்து வதால் கல்லீரல் பாதிக்கப் படுகிறது. ‘கதறுது கல்லீரல்’ என ‘தி இந்து’வில்கூட செய்தி வெளியிட்டிருந்தார்களே” எனக் கூறினார்.