'இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை'; கருத்தை பொதுமக்களிடம் சேர்த்த ரசிகர்களுக்கு நன்றி: ரஜினி ட்வீட்

'இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை'; கருத்தை பொதுமக்களிடம் சேர்த்த ரசிகர்களுக்கு நன்றி: ரஜினி ட்வீட்
Updated on
1 min read

பாமர மக்களும் சிந்திக்கிற வகையில், அரசியல் மாற்றம் குறித்த கருத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் கொண்டு சேர்த்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி ஓய்வு, ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2017-ம் ஆண்டு டிச.31 அன்று தான் அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனாலும் 3 ஆண்டுகளாக ரஜினியின் செயல்பாடு குறித்து மற்றவர்கள் பேசினார்கள். ரஜினி மட்டும் பேசவில்லை. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பை ரஜினி நடத்தினார்.

அதில் தான் அரசியலுக்கு வந்தாலும் முதல்வர் இல்லை. நல்லவர், நேர்மையானவர், அறிவாளியாக உள்ள ஒருவரை முதல்வராக அமர்த்தி ஒரு குழு ஆட்சிக்கு வழிகாட்டும் என்று ரஜினி தெரிவித்தார். இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் வாய்ப்பு தர உள்ளதாகத் தெரிவித்தார். அரசியலில் பணம் செலவழிப்பது இல்லாமல் மக்கள் அலை ஒன்று, எழுச்சி ஒன்று உருவாகவேண்டும், அதை ரசிகர்களும், ஊடகங்களும் உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மேலும் குழப்பமடைந்தனர். ரஜினி வருவாரா? வர மாட்டாரா? எனக் குழப்பம் அடைந்தனர். ஆனால், ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதை மட்டும் தெளிவாக அறிவித்திருந்தார். இந்நிலையில் ரஜினியின் பேட்டியைப் பலரும் பலவிதமாக எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினி இன்று அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

அதில் ரசிகர்கள், ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினியின் ட்வீட்:

“அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம், இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி”.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in