மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி
Updated on
1 min read

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவம்னை விரைவில் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

திண்டுக்கல்லில் ரூ.325 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் மருத்துவ கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

இன்று காலை நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

முன்னதாக மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

திருமங்கலம் அடுத்த கப்பலூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி, "தென் மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த எய்ம்ஸ் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தி உள்ளது. எத்தனையோ நகரங்கள் இருந்தும் மதுரையிலேயே எய்ம்ஸ் அமைகிறது. மதுரை அதிர்ஷ்டமான நகரம்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். டெல்லி எய்ம்ஸ் ல் உள்ள அனைத்து வசதிகளும் மதுரையில் வர உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வர உள்ளது.

மதுரை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.

சாலை வசதி வேண்டி கோரிக்கை விடுத்தீர்கள். முன்பு சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது. தற்போது தாமான சாலை அமைத்து போக்குவரத்து நெரிசல் இன்றி உள்ளது" என்றார்.

விழாவில் ஒரு குழந்தைக்கு ஜெயப்பிரபா என்று முதல்வர் பெயர் சூட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in