ஸ்டாலின் நடவு செய்வது போன்ற புகைப்படங்கள் கிராபிக்ஸ்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அமைச்சர் ஜெயக்குமார் - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
அமைச்சர் ஜெயக்குமார் - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஸ்டாலின் நடவு செய்வது போன்ற புகைப்படங்கள் கிராபிக்ஸ் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்லார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 39-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மார்ச் 14) டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ஜிஎஸ்டியில் வணிகர்கள் போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டு உள்ளதே?

போலியான ரசீதுகளை வியாபாரிகள் கொடுத்து ஏமாற்றுவது சட்டப்படி குற்றமாகும். வரி ஏய்ப்பு செய்வது மிகப்பெரிய குற்றம். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. புகார் அளிக்கப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வரிக்குறைப்பு நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?

ஏற்கெனவே 292 சரக்குகள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 24 சரக்குகளுக்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 42 சேவைகள் மீது வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 36 சேவைகள் மீது முழுமையாக வரி விலக்கு செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசின் முயற்சியின் மூலம் வணிகர்கள், மக்களின் நலன் காப்பாற்றப்பட்டுள்ளது. மேலும், 62 சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரிக்குறைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது. வணிகர்கள், மக்களைப் பாதிக்கின்ற அம்சங்கள் அதில் இருந்தால் நிச்சயமாக ஜிஎஸ்டி கவுன்சிலில் எதிர்ப்பு தெரிவிப்போம்.

கமல் - ரஜினி இணைந்தால் அதிமுக-திமுக பலவீனம் அடையும் என்ற கருத்து உலவுகிறதே?

ரஜினி தன் கொள்கை, லட்சியத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் முதலில் அரசியல் சமுத்திரத்தில் குதிக்கட்டும். அதன்பிறகு எங்கள் கருத்தைச் சொல்கிறோம். அனுமானத்திற்குஒ பதில் சொல்ல முடியாது. 2021-ல் அதிமுக தனது ஆட்சியை நிலைநிறுத்தும்.

அதிமுக பண பலத்தில் வெற்றியடைவதாக ரஜினி விமர்சித்துள்ளாரே?

அவர் பொதுவாக கருத்துச் சொல்லியிருக்கிறார். எங்களைக் குறிப்பிட்டு சொன்னால் பதில் அளிக்கலாம்.

கமலை எதிர்க்கும் அதிமுக, ரஜினியை எதிர்க்கத் தயங்குகிறதா?

அப்படியெல்லாம் கிடையாது.

தலைவர்களை நம்பித்தான் கட்சிகள் வாக்குகளைப் பெறுவதாக ரஜினி தெரிவித்துள்ளாரே?

அண்ணா- எம்ஜிஆர்- ஜெயலலிதா எனும் தலைவர்களின் சக்திகள் மூலம்தான் மக்களைச் சந்தித்து வெற்றி பெறுவோம்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், சட்டப்பேரவையில் பாஜகவின் பிரதிநிதித்துவம் இருக்கும் எனக் கூறியுள்ளாரே?

அவர் ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கிறார். கட்சியை பலப்படுத்த இவ்வாறு சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.

முதல்வர் விவசாய நிலத்தில் நடவு நட்டதையடுத்து, ஸ்டாலின் நடவு செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலவுகிறதே?

அவையெல்லாம் கிராபிக்ஸ். இப்போது அவ்வாறு செய்வது சர்வ சதாரணம். சிவப்புக் கம்பளம் விரித்து, ஷூ அணிந்துகொண்டு ஸ்டாலின் நடவு நட்டதை நாமெல்லாம் பார்த்தோம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in