

டெல்டா பகுதிகளை பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து கொண்டுவரப்பட்ட சட்டத்தில் எந்தக் குறையும் இல்லை. அந்த சட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பு உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசும் போது, ‘‘டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதில் உள்ள குறைபாடுகளை நீக்கி தேர்வுக் குழுவுக்கு அனுப்பக் கோரினோம். ஆனால், நீங்கள் ஒப்புக் கொள்ளாமல் சட்டத்தை நிறைவேற்றிவிட்டீர்கள். நடைமுறையில், செயல்பாட்டில் உள்ள எந்த திட்டத்தையும்சட்டம் கட்டுப்படுத்தாது என்றுதெரிவித்துள்ளீர்கள்.
தற்போது வேதாந்தா நிறுவனம் 700 எண்ணெய்க் கிணறுகளுக்கு அனுமதி பெற்றுள்ளது. அது விவசாயிகளை பாதிக்குமா பாதிக்காதா? அவற்றை ரத்து செய்யாதது ஏன்? அவர்கள் நீதிமன்றம் சென்றால் உடனே தடை கொடுக்க மாட்டார்களா’’ என்றார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி விவசாயம் சார்ந்த பொருள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு முழுமையாக உள்ளது. அந்த அடிப்படையில்தான் சட்டம் கொண்டு வந்து, அதற்கு முழு சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதற்காக, நாடாளுமன்றத்தில்கூட இதுகுறித்து பேசியுள்ளீர்கள். நேற்றும் இதுகுறித்து உறுப்பினர் பேசி, அதற்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இந்தச் சட்டத்தை பொறுத்தவரை முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து தீர்க்கமான முடிவெடுத்து, டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்துள்ளது. நீங்கள் தேடிப் பார்த்தாலும் சட்டத்தில் எந்த ஓட்டையும் இருக்காது.
இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.