

சட்டப்பேரவையில் மின்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பேசும்போது, ‘‘தமிழகத்தில் இலவச மின்சாரம் கேட்டு 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் 20 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். 2000-ம்ஆண்டு மார்ச் மாதம் பதிவு செய்தவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
ஆண்டுக்கு, சாதாரண திட்டத்தில் 10 ஆயிரம், தத்கால் திட்டத்தில் 10 ஆயிரம் இணைப்புகள் கொடுக்கப்போவதாக அமைச்சர் அறிவித்தார். அவ்வாறு ஆண்டுக்கு20 ஆயிரம் பேருக்கு கொடுத்தால் 4 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொடுக்க 2042-ம் ஆண்டு ஆகும். அப்போது மேலும் 5 லட்சம் பேர் பதிவு செய்திருப்பார்கள். எனவே, மின் மிகை மாநிலமாக இருப்பதாகக் கூறும் நீங்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் இணைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளை பாதுகாக்க முடியும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பி.தங்கமணி, ‘‘உங்கள் ஆட்சியில் நீங்கள் 2 லட்சம் அறிவித்தீர்கள். கொடுத்தது வெறும் 59 ஆயிரம் மட்டுமே. அதுவும் அருகில் உள்ள இணைப்புகள் மட்டும் கொடுத்தீர்கள். கம்பம் அருகில் உள்ள கிணற்றுக்கு இணைப்பு கொடுத்துள்ளீர்கள்.
நாங்கள் 9 ஆண்டுகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் இணைப்புகள் கொடுத்துள்ளோம். மிகை மாநிலம் என்பதற்காக உடனே கொடுக்க முடியாது. நிதி வேண்டும். ஒரு இடத்தில் 20 அல்லது 30 கம்பங்கள் அமைக்க வேண்டியிருக்கும். மின்மிகை மாநிலம் என்பதற்காக ஒரே நாளில் இணைப்பு வழங்கிவிட முடியாது’’ என்றார்.