Published : 14 Mar 2020 08:18 AM
Last Updated : 14 Mar 2020 08:18 AM

தமிழகத்தில் 6 இடங்களுக்கு 9 பேர் போட்டி; மாநிலங்களவை தேர்தல் மனு தாக்கல் நிறைவு: வேட்புமனுவை திரும்பப் பெற மார்ச் 18 கடைசி நாள்

மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில், 6 இடங்களுக்கு 9 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்துக்கு 18 இடங்கள் உள்ளன. இதில் 6 உறுப்பினர்கள் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த 6 இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, கடந்தமார்ச் 6-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, நேற்று மாலை 3 மணியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலை பொறுத்தவரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடிப்படையில் 3 இடங்கள் அதிமுகவுக்கும் 3 இடங்கள் திமுகவுக்கும் கிடைத்துள்ளது.

மனுத்தாக்கலின் முதல் நாளில், சுயேச்சை வேட்பாளர்கள் பத்மராஜன், அக்னிராமச்சந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி திமுக சார்பில் 3 இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து, 12-ம் தேதி அதிமுக சார்பில் 3 இடங்களுக்கு அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்பு செயலாளரும் மக்களவை முன்னாள் துணைத் தலைவருமான மு.தம்பிதுரை ஆகியோருடன் கூட்டணி கட்சியான தமாகா சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும் மனுத்தாக்கல் செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் வரை 2 சுயேச்சைகள் உட்பட 8 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

மனுத்தாக்கலின் இறுதிநாளான நேற்று, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த அகில இந்திய யாதவ சேனா தலைவர் இளங்கோ யாதவ் என்பவர் வேட்பு மனுவை பேரவைச் செயலர் கே.சீனிவாசனிடம் வழங்கினார். நேற்று மாலை 3 மணி நிலவரப்படி இளங்கோ யாதவுடன் சேர்த்து 9 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மாநிலங்களவையின் ஒரு இடத்துக்கான உறுப்பினரை தேர்வு செய்ய 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். வேட்பு மனுத்தாக்கலின் போதே 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிவு கடிதம் அளிக்க வேண்டும்.

இந்நிலையில், வரும் மார்ச் 16-ம் தேதி காலை 11 மணிக்கு பேரவைச் செயலர் அறையில் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் பரீசீலிக்கப்படுகிறது. அதன்பின், மார்ச் 18-ம் தேதி மாலை 3 மணிக்குள் போட்டியிட விரும்பாதவர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

போட்டி இருப்பின் மார்ச் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x