வங்கிகள் இணைப்பு தொடர்பான வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம்: வாடிக்கையாளர்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்

வங்கிகள் இணைப்பு தொடர்பான வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம்: வாடிக்கையாளர்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்
Updated on
1 min read

இணைக்கப்பட உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வங்கிகள் பின்னர் அறிவிக்கும். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல்10 பொதுத்துறை வங்கிகள் இணைந்து 4 வங்கிகளாக மாறுகின்றன. இதுதொடர்பான வாட்ஸ்-அப் தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வரும் 24-க்குள் வருமானவரி பிடித்தம் தொடர்பான 16-ஏ படிவத்தை தங்கள் வங்கிகளில் உடனடியாக வழங்க வேண்டும்.

வங்கிக் கணக்கில் இருந்து மின்னணு வழியில் பணம் செலுத்தும் இசிஎஸ் முறையை மாற்றவேண்டும். ஏற்கெனவே வைத்துள்ள ஏடிஎம் அட்டையை ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு பயன்படுத்த முடியுமா என தெரிந்துகொள்ள வேண்டும். இணைக்கப்படும் வங்கிகளில் சம்பளம், ஓய்வூதியக் கணக்கு வைத்திருந்தால் மாற்றுஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்’என கூறப்பட்டுள்ளது. இதுவங்கி வாடிக்கையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி கேட்டபோது வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

பொதுவாக, வங்கிகள் இணைக்கப்பட்டால் அவை ஒருங்கிணைந்து செயல்பட ஓராண்டு வரை ஆகும். எனவே, அந்த வங்கிகளில் கணக்குவைத்துள்ளவர்கள் வங்கி இணைப்புக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி தெரிவிக்கும்.

சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பரவும் வதந்திகளை வாடிக்கையாளர்கள் பொருட்படுத்த வேண்டாம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in